Bible Versions
Bible Books

Isaiah 26 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்: கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார். நமக்குப் பலமான நகரம் உள்ளது. நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
2 கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள். தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
3 கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
4 எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
5 ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும்.
6 பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
7 நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை. நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள். தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
8 ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
9 இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது. என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது. தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது, ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
10 தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான். அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான். அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட, கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான்.
11 ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள். கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும். உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள், உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள்.
12 கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர். ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
13 கர்த்தாவே, நீர் எங்களது தேவன், ஆனால் கடந்த காலத்தில், நாங்கள் மற்ற தெய்வங்களைப் பின்பற்றினோம். நாங்கள் மற்ற எஜமானர்களுக்கு உரியவர்களாய் இருந்தோம், ஆனால், இப்பொழுது நாங்கள் ஒரே ஒரு நாமத்தை, அதுவும் உமது நாமத்தை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறோம்.
14 அந்தப் பொய்த் தெய்வங்களெல்லாம் உயிரோடு இல்லை. அந்த ஆவிகள் மரணத்திலிருந்து எழுவதில்லை. அவற்றை அழித்துவிட நீர் முடிவு செய்தீர். அவற்றை நினைவூட்டுகிற அனைத்தையும் நீர் அழித்துவிட்டீர்.
15 நீர் நேசித்த நாட்டிற்கு உதவியிருக்கிறீர் மற்ற ஜனங்கள் அந்நாட்டை தோற்கடிக்காதபடி நீர் தடுத்தீர்.
16 கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள். நீர் அவர்களைத் தண்டிக்கும்போது உம்மிடம் அமைதியான பிரார்த்தனைகளை ஜனங்கள் செய்வார்கள்.
17 கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது, நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப் போல் இருக்கிறோம். அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள்.
18 அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது. நாங்கள் குழந்தை பெற்றோம். ஆனால் அது காற்றாகியது. நாங்கள் உலகத்துக்காக புதிய ஜனங்களை உருவாக்கவில்லை. நாங்கள் தேசத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவில்லை.
19 ஆனால் கர்த்தர் கூறுகிறார், "உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள். எங்கள் ஜனங்களின் உடல்களும் மரணத்திலிருந்து எழும். மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள். உம்முடைய பனி செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும். புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள். ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.
20 எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள். உங்கள் கதவுகளை மூடுங்கள். கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள். தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள்.
21 கர்த்தர் அவரது இடத்தை விட்டு உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார். கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும். இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×