Bible Versions
Bible Books

Proverbs 25 (TOV) Tamil Old BSI Version

1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
4 வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
5 ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
6 ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
8 வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
9 நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
10 மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
12 கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
13 கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.
15 நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
16 தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
17 உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.
18 பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.
19 ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.
20 மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.
22 அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
24 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
25 தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
26 துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
27 தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
28 தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×