Bible Versions
Bible Books

Leviticus 15:2 (TOV) Tamil Old BSI Version

1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
3 அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
4 பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
5 அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
6 பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பபட்டிருப்பானாக.
7 பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
8 பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
9 பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.
10 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
11 பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
12 பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
13 பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
14 எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
15 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப்பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
16 ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
17 கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
18 இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊரலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
20 அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
22 அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிறபடுக்கையும் தீட்டுப்படும்.
25 ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.
29 எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.
32 பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும்,
33 சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×