Bible Versions
Bible Books

Matthew 6 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "நீங்கள் நற்செயல்களைச் செய்யும் பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.
2 "நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
3 எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள்.
4 உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார். (லூ.11:2-4)
5 "நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள்.
6 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
7 "நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
8 அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார்.
9 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும். ‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே, உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10 உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே எங்கள் குற்றங்களையும் மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணா மல் பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’
14 நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா வானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார்.
15 ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.
16 "நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள்.
17 எனவே, நீங்கள் உப வாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக் கொள்ளுங்கள்.
18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
19 "உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள்.
20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது.
21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
22 உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும்.
23 ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும்.
24 எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.
25 "எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம்.
26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள்.
27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.
28 "உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை.
29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை.
30 "அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.
31 ‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள்.
32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார்.
33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார்.
34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×