Bible Versions
Bible Books

Genesis 11 (TOV) Tamil Old BSI Version

1 பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
12 அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
14 சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
15 ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
16 ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
18 பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
21 செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
22 செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
23 நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
24 நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
25 தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
26 தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
27 தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
28 ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
29 ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
30 சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
31 தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
32 தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×