Bible Versions
Bible Books

Isaiah 23 (TOV) Tamil Old BSI Version

1 தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
2 தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள்.
3 சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது.
4 சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெறுகிறதும் இல்லை; இளைஞரை வளர்க்கிறதும் இல்லை; கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்லுகிறது.
5 எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
6 கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
7 பூர்வநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம் போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோகும்.
8 கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
9 சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் யாவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
10 தர்ஷீஸின் குமாரத்தியே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
11 கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து:
12 ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
13 கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த ஜனம் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்தரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரமனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
14 தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
15 அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
16 மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.
17 எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம்பண்ணும்.
18 அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×