Bible Versions
Bible Books

Psalms 90 (TOV) Tamil Old BSI Version

1 ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
3 நீர் மனுஷரை நீர்த்துளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.
4 உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
5 அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
6 அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும்.
7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
8 எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
9 எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.
10 எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம்.
11 உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்?
12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
13 கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
15 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
16 உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×