Bible Versions
Bible Books

Job 29 (TOV) Tamil Old BSI Version

1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2 சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
3 அப்பொழுது அவர் தீபம் என்தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4 தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
5 அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
7 நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
8 வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
9 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10 பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11 என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12 முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
13 கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
14 நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
15 நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
16 நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
17 நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
18 என் கூட்டிலே நான் ஜீவித்துப் போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
19 என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுவதும் தங்கியிருந்தது.
20 என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
21 எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
22 என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
23 மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
24 நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
25 அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×