Bible Versions
Bible Books

Matthew 2 (TOV) Tamil Old BSI Version

1 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.
3 ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
13 அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
14 அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
15 ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17 புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
18 எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
19 ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:
20 நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.
21 அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.
22 ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,
23 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×