Bible Versions
Bible Books

Esther 3 (TOV) Tamil Old BSI Version

1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.
2 ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.
3 அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
4 இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
5 ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
6 ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
7 ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
8 அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.
9 ராஜாவுக்கு சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான்.
10 அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,
11 ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.
12 முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.
13 ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.
14 அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம் பண்ணப்பட்டது.
15 அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×