Bible Versions
Bible Books

2 Samuel 1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 அமலேக்கியரை முறியடித்தபின் தாவீது சிக்லாகிற்குத் திரும்பிச் சென்றான். சவுல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. அங்கே தாவீது இரண்டு நாட்கள் தங்கினான்.
2 பின்பு, மூன்றாம் நாளில், ஒரு இளம் வீரன் சிக்லாகிற்கு வந்தான். அவன் சவுலின் முகாமிலிருந்து வந்திருந்தான். அம்மனிதனின் ஆடைகள் கிழிந்திருந்தன. அவனுடைய தலையில் புழுதி படிந்திருந்தது அவன் தாவீதிடம் வந்து நிலத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
3 தாவீது அம்மனிதனைப் பார்த்து, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டான். அம்மனிதன் தாவீதிடம், "நான் இஸ்ரவேலரின் முகாமிலிருந்து வருகிறேன்" என்று பதிலுரைத்தான்.
4 தாவீது அம்மனிதனை நோக்கி, "யார் போரில் வெற்றியடைந்தார் என்பதை தயவு செய்து கூறு" என்றான். அம்மனிதன், "நம் வீரர்கள் போரிலிருந்து தப்பி ஓடினார்கள். பலர் யுத்தத்தில் அகப்பட்டு மடிந்தனர். சவுலும் அவனது மகன் யோனத்தானுங்கூட மரித்துவிட்டனர்" என்று பதில் கூறினான்.
5 தாவீது இளைஞனாகிய அந்த வீரனிடம், "சவுலும் யோனத்தானும் மரித்ததைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டான்.
6 அந்த இளம் வீரன், "நான் கில்போவா மலைக்குப் போயிருந்தேன். சவுல் தனது ஈட்டியில் சொருகிச் சாய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெலிஸ்தியரின் தேர்களும் குதிரை வீரர்களும் சவுலுக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தனர்.
7 சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து
8 என்னை யாரென்று கேட்டார். நான் ஒரு அமலேக்கியன் என்பதை அவருக்குக் கூறினேன்.
9 அப்போது சவுல், ‘தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. நான் மிகவும் காயப்பட்டு மரிக்கும் தருவாயில் உள்ளேன்’ என்றார்.
10 அவர் அதிகமாகக் காயப்பட்டிருந்ததால், இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நான் மிக நன்கு அறிந்தேன். எனவே நான் அவரைக் கொன்றேன். பின்பு அவரது தலையிலிருந்த கிரீடத்தையும் புயங்களில் இருந்த கடகத்தையும் கழற்றினேன். அவற்றை என் ஆண்டவனாகிய உங்களிடம் கொண்டுவந்துள்ளேன்" என்றான்.
11 அப்போது தாவீது தன் துக்கமிகுதியால் ஆடைகளை கிழித்தான். தாவீதோடிருந்த மனிதர்களும் அவ்வாறே செய்தார்கள்.
12 அவர்கள் வருத்தமுற்று அழுது மாலை வரைக்கும் ஏதும் உண்ணவில்லை. சவுலும் அவனது மகன் யோனத்தானும் மரித்துப் போனதால் அவர்கள் அழுதார்கள். தாவீதும் அவனது மனிதர்களும் கொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய ஜனங்களுக்காகவும் இஸ்ரவேலருக்காகவும் அழுதனர். சவுலும், யோனத்தானும் பல இஸ்ரவேலரும் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்காக அவர்கள் அழுதனர்.
13 சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, "நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?" என்று கேட்டான். அந்த இளம் வீரன், "நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்" என்றான்.
14 தாவீது அந்த இளம் வீரனிடம், "கர்த்தர் தேர்ந் தெடுத்த, அரசனைக் கொல்வதற்கு நீ ஏன் அச்சம் கொள்ளவில்லை?" என்றான்.
15 (15-16) பின்பு தாவீது அமலேக்கியனை நோக்கி, “உனது மரணத்திற்கு நீயே காரணம். கர்த்தர் தேர்ந்தெடுத்த அரசனைக் கொன்றாய் என்று நீயே கூறினாய். உனது வார்த்தைகளே நீ குற்றவாளி என்று தீர்க்கின்றன” என்று கூறினான். பின்பு தாவீது ஒரு இளம் வேலையாளை அழைத்து அமலேக்கியனைக் கொல்லுமாறு கூறினான். எனவே அந்த இஸ்ரவேல் இளைஞன் அமலேக்கியனைக் கொன்றான்.
16 16.
17 சவுலையும் அவனது மகன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான்.
18 அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் "வில்" எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.
19 "இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது. ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!.
20 அச்செய்தியைக் காத் நகரில் கூறாதே, அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே. அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்! அந்த அந்நியர்கள் மகிழக்கூடும்.
21 மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன். அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன். வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன. சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
22 வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான். வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல். இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்! வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர்.
23 சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர். மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை! அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள். அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்! இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!
25 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். கில் போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
26 சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன். உனது அன்பு பெரு மகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
27 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×