Bible Versions
Bible Books

2 Samuel 21 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தாவீது அரசனாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், "சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்" என்றார்.
2 கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.) அரசனாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான்.
3 தாவீது கிபியோனியரிடம், "நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்" என்றான்.
4 கிபியோனியர் தாவீதிடம், "தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது" என்றனர். தாவீது, "அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?" என்று கேட்டான்.
5 அதற்கு கிபியோனியர் அரசன் தாவீதிடம், "எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான்.
6 சவுலின் ஏழு மகன்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் மகன்களைத் தூக்கில் இடுவோம்" என்றார்கள். அரசனாகிய தாவீது, "நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்" என்றான்.
7 ஆனால் அரசன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் மகன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான். ஆகையால் அரசன் மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான்.
8 சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும் ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் மகள் இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் மகன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து மகன்களைத் தாவீது அழைத்தான்.
9 இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.
10 ஆயாவின் மகளான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறி குறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப்பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.
11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள்.
12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)
13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர்.
14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். அரசன் சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.
15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான்.
16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 71/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான்.
17 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான். பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், "இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்" என்றனர்.
18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.
19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.
20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன்.
21 அவன் இஸ்ரவேலை சவாலுக்கு அழைத்தான். இஸ்ரவேலரை பார்த்து நகைத்தான். ஆனால் யோனத்தான் அவனைக் கொன்றான். (யோனத்தான் தாவீதின் சகோதரனான சீமேயின் மகன்.)
22 This verse may not be a part of this translation
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×