Bible Versions
Bible Books

Matthew 28 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள்.
2 அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன் அப்பாறாங்கல்லின் மீது அமர்ந்தான்.
3 மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன.
4 கல்லறைக்குக் காவலிருந்த போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப் போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.
5 தூதன் பெண்களைப் பார்த்து, "பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன்.
6 ஆனால் இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னது போலவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். அவரது சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள்.
7 உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கலிலேயாவிற்குச் சென்று கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார். அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்" என்று கூறினான்.
8 ஆகவே, அப்பெண்கள் விரைந்து கல்லறையை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் பயந்துபோனார்கள். அதே சமயம் மகிழ்ச்சியடைந்தார்கள். நடந்ததை சீஷர்களிடம் சொல்ல அவர்கள் ஓடினார்கள்.
9 அப்பொழுது இயேசு அவர்களின் முன்பு வந்து நின்றார். இயேசு அவர்களைப் பார்த்து "வாழ்க" என்றார். இயேசுவின் அருகில் சென்ற பெண்கள் அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்கள்.
10 பின்னர் இயேசு அப் பெண்களிடம், "பயப்படாதீர்கள். என் சகோதரர்களிடம் (சீஷர்களிடம்) சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னை அங்கே காண்பார்கள்" என்றார்.
11 பெண்கள் சீஷர்களைத் தேடிப் போனார்கள். அதே சமயம், கல்லறைக்குக் காவலிருந்த போர் வீரர்களில் சிலர் நகருக்குள் சென்றார்கள். நடந்தவை அனைத்தையும் தலைமை ஆசாரியர்களிடம் சொல்வதற்காக அவர்கள் சென்றார்கள்.
12 தலைமை ஆசாரியர்கள் மூத்த யூதத் தலைவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, அதன்படி ஒரு பொய் கூறுவதற்காக போர்வீரர்களுக்குப் பெரும் பணம் தந்தார்கள்.
13 அவர்கள் போர்வீரர்களிடம், "நீங்கள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபொழுது இயேசுவின் சீஷர்கள் அவரது சரீரத்தைத் திருடிச் சென்று விட்டார்கள் என மக்களிடம் சொல்லுங்கள்.
14 ஆளுநர் இதை அறிந்தால் அவரைச் சமாளித்து உங்களுக்குத் தீங்கு வராதபடி நாங்கள் காப்பாற்றுகிறோம்" என்றார்கள்.
15 ஆகவே, போர் வீரர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சொல்லியபடி செய்தார்கள். இன்றைக்கும் யூதர்களுக்கிடையில் இந்தப் பொய்யான கதை சொல்லப்பட்டு வருகிறது. அப். 1:6-8)
16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள்.
17 மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். ஆனால் சில சீஷர்கள் அவர் உண்மையாகவே இயேசு என்று நம்பவில்லை.
18 ஆகவே இயேசு அவர்களிடம், "வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
19 ஆகவே உலகில் உள்ள மக்கள் அனைவரையும் சீஷர்களாக்குங்கள். பிதாவின் பெயராலும் குமாரனின் பெயராலும் பரிசுத்த ஆவியானவரின் பெயராலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குங்கள்.
20 நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×