Bible Versions
Bible Books

Acts 17 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது.
2 யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான்.
3 வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார் என்றான். அவர்களில் சிலர் ஒப்புக் கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள்.
4 ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.
5 ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக் கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர்.
6 ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும் இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்!
7 யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர் என்று கூக்குரலிட்டனர்.
8 நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள்.
9 யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர்.
10 அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர்.
11 தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள்.
12 இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர்.
13 தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர்.
14 எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர்.
15 பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள் என்றன.
16 அத்தேனேயில் பவுல் சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு பவுல் மனக்கலக்கமடைந்திருந்தான்.
17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான்.
18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள். அவர்களில் சிலர், தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்று கொண்டிருக்கிறான்? என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக் கொண்டிருந்தான். எனவே அவர்கள், வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக் கொண்டிருப்பதாகப் படுகிறது என்றனர்.
19 அவர்கள் பவுலைக் கண்டு பிடித்து அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள்.
20 நீங்கள் சொல்லுபவை எங்களுக்குப் புதியவை. இவற்றைக் குறித்து நாங்கள் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இப்போதனையின் பொருள் என்ன என்று நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றனர்.
21 (அத்தேனேயின் மக்கள் அனை வரும் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)
22 அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.
23 நான் உங்கள் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நீங்கள் வழிபடுகின்ற பொருட்களைப் பார்த்தேன். ԅஅறியப்படாத தேவனுக்கு என்று எழுதப்பட்ட ஒரு பீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாத ஒரு தேவனை வழிபடுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற தேவன் அவரே!
24 அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை.
25 உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன.
26 ஒரு மனிதனை உரு வாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார்.
27 மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.
28 ԅநாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ԅஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.
29 நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல.
30 கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்து கொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார்.
31 தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம் தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார் என்றான்.
32 இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம் என்றனர்.
33 எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான்.
34 ஆனால் மக்களில் சிலர் பவுலை நம்பி அவனோடு சேர்ந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தியொனீசியு, அவன் அரியோபாகஸ் சங்கத்தின் உறுப்பினன். வேறொருத்தி தாமரி என்று அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி. இன்னும் சில மக்களும் அவர்களுடன் விசுவாசிகளாக மாறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×