Bible Versions
Bible Books

Acts 23 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.
2 தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான்.
3 பவுல் அனனியாவைப் பார்த்து, தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது என்றான்.
4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்! என்றனர்.
5 பவுல், சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ԅஉன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது என்று எழுதப்பட்டள்ளது என்றான்.
6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்! என்றான்.
7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது.
8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.)
9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்! என்றனர்.
10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும் என்றார்.
12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்து கொண்டனர்.
13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர்.
14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்!
15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம் என்றனர்.
16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான்.
17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும் என்றான்.
18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம் என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்? என்று கேட்டான்.
20 இளைஞன், பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர்.
21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம் மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே என்றான். அனுப்பப்படுதல்
23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள்.
24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும் என்றான்.
25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.
26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.
27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன்.
28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன்.
29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல.
30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.
31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர்.
32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர்.
33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.
34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்? என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார்.
35 ஆளுநர், உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன் என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக் கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×