Bible Versions
Bible Books

Amos 4 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே என்னைக் கவனியுங்கள். நீங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்கள் அந்த ஏழைகளை நசுக்குகிறீர்கள். நீங்கள் "எங்களுக்குக் குடிக்கக் கொஞ்சம் கொண்டு வாருங்கள்"என்று உங்கள் கணவர்களிடம் கூறுகிறீர்கள்.
2 கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி கொடுத்தார். அத்துன்பங்கள் உங்களுக்கு வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால் வாக்களித்தார். ஜனங்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அவர்கள் மீன் தூண்டிலைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள்.
3 உங்கள் நகரம் அழிக்கப்படும். பெண்கள் நகரச்சுவர்களிலுள்ள வெடிப்புகள் வழியே அவசரமாக வெளியேறி பிணக் குவியல்களின் மேல் விழுவார்கள். கர்த்தர் இவற்றை கூறுகிறார்.
4 "பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்! கில்காலுக்குப் போய் மேலும் பாவம் செய்யுங்கள். உங்களது பலிகளை காலை நேரத்தில் செலுத்துங்கள். மூன்று நாள் விடுமுறைக்கு உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டு வாருங்கள்.
5 புளித்த மாவுள்ள நன்றிக் காணிக்கையைக் கொடுங்கள். ஒவ்வொருவரிடமும் சுயசித்தக் காணிக் கைகளைப்பற்றிக் கூறுங்கள். இஸ்ரவேலே, அவற்றைச் செய்ய நீ விரும்புகிறாய். எனவே போய் அவற்றைச் செய்" கர்த்தர் இவற்றைக் கூறினார்.
6 "நான், உங்களை என்னிடம் வரச்செய்ய வேண்டுமென பலவற்றை முயற்சி செய்தேன். நான் நீங்கள் உண்ண எந்த உணவையும் தரவில்லை. உங்கள் நகரங்கள் எதிலும் உண்ண உணவு கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை" என்று கர்த்தர் கூறினார்.
7 "நான் அறுவடைக்கு மூன்று மாதத்திற்கு முன்பு மழையையும் நிறுத்தினேன். எனவே விளைச்சல் விளையவில்லை. பிறகு நான் ஒரு நகரத்தில் மழை பெய்யும்படிச் செய்தேன். ஆனால் அடுத்த நகரில் மழை பெய்யவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் மழை பெய்தது. ஆனால் நாட்டின் அடுத்தப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது.
8 எனவே இரண்டு அல்லது மூன்று நகரங்களிலுள்ள ஜனங்கள் அடுத்த நகருக்கு தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றனர். ஆனால் எல்லோருக்கும் அங்கு தண்ணீர் போதுமானதாக இல்லை. இருந்தாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை" என்று கர்த்தர் கூறினார்.
9 "நான் உங்கள் விளைச்சலை வெப்பத்தாலும் நோயாலும் மரிக்கும்படிச் செய்தேன். நான் உங்களது தோட்டங்களையும் திராட்சத் தோட்டங்களையும் அழித்தேன். உங்களது அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றன. ஆனாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை" என்று கர்த்தர் கூறினார்.
10 "நான் எகிப்திற்குச் செய்ததுபோல உங்களுக்கு எதிராக வியாதிகளை அனுப்பினேன். நான் உங்களது இளைஞர்களை வாள்களால் கொன்றேன். நான் உங்கள் குதிரைகளை எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் பாளயம் பிணங்களால் துர்நாற்றம் வீசும்படி செய்தேன். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை" என்று கர்த்தர் கூறினார்.
11 "நான் சோதோமையும் கொமோராவையும் அழித்ததுபோன்று உங்களை அழித்தேன். அந்நகரங்கள் முழுவதுமாக அழிந்தன. நீங்கள் நெருப்பிலிருந்து வெளியே இழுக்கப்பட்ட எரிந்த குச்சியைப் போன்றவர்கள். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை" என்று கர்த்தர் கூறினார்.
12 "எனவே இஸ்ரவேலே, நான் இவற்றை உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, உனது தேவனை சந்திக் கத் தயாராக இரு.
13 நான் யார்? நானே மலைகளைப் படைத்தவர். நான் உங்கள் இருதயங்களையும் உண்டாக்கினவர். நான் ஜனங்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். நான் இருளை விடியற் காலையாக மாற்றினேன். நான் பூமியின் மேலுள்ள மலைகைளின் மேல் நடக்கிறேன். நான் யார்? எனது நாமம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×