Bible Versions
Bible Books

Amos 8 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன்.
2 "ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?" என்று என்னிடம் கேட்டார்" நான், "ஒரு கோடைக்கனியுள்ள கூடை" என்றேன். பிறகு கர்த்தர் என்னிடம், "எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன்.
3 ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்" என்றார்.
4 எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்: நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.
5 வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: "நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்? நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர ஓய்வுநாள் எப்பொழுது முடியும்? எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும். அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம்.
6 ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது, எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம். நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால் அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம். ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற கோதுமைகளை விற்க முடியும்."
7 கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார். "நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
8 அவற்றால் முழு நாடும் நடுங்கும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள். முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும். இந்த நாடு தடுமாறிப் போகும்."
9 கர்த்தர் இவற்றையும் கூறினார்: "அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன். நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன்.
10 நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன். உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும். நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன். நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன். நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன். இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்."
11 கர்த்தர் கூறுகிறார்: "பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள். தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள். இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள்.
12 ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரை கடலுக்கும் வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள். ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைவார்கள். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
13 அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால் பலவீனம் அடைவார்கள்.
14 அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர். அவர்கள், "தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்" என்றார்கள். மேலும் அவர்கள், பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்" என்றார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×