Bible Versions
Bible Books

Ecclesiastes 3 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.
2 பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, மரிப்பதற்கு ஒரு காலமுண்டு, நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.
3 கொல்வதற்கு ஒரு காலமுண்டு, குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு, அழிப்பதற்கு ஒரு காலமுண்டு, கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.
4 அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு, வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு, மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.
5 ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு, ஆயு தங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு, தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.
6 சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு, இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு, பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு, பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.
7 துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு, அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு, அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு, பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.
8 அன்பு செய்ய ஒரு காலமுண்டு, வெறுக்கவும் ஒரு காலமுண்டு, சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு, சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.
9 ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா?
10 தேவன் நமக்குக் கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன்.
11 அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார்.
12 ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன்.
13 எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.
14 தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக் கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும்.
15 ஏற்கனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார்.
16 நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது.
17 எனவே நான் எனக்குள்ளே: "தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தைத் தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்" என்கிறேன்.
18 ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, "ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப் போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்" என்று சொல்லிக்கொண்டேன்.
19 மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. "உயிர் மூச்சும்" மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்று போல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா?
20 மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்று போலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன.
21 ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்?
22 எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற் செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×