Bible Versions
Bible Books

Genesis 21 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
2 சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் மகனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம் தேவன் வாக்களித்தபடியே நடந்தது.
3 சாராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.
4 ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது.
5 ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது.
6 சாராள், "தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்தார். இதைக் கேள்விப்படும் எவரும் என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள்.
7 ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்" என்றாள்.
8 ஈசாக்கு பால்குடிக்க மறக்கும் நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து கொடுத்தான்.
9 ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் மகனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது.
10 சாராள் ஆபிரகாமிடம், "இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் மகன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை" என்றாள்.
11 இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் மகன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான்.
12 ஆனால் தேவன் ஆபிரகாமிடம், "அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு.
13 ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் மகனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் மகன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்" என்றார்.
14 மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக் கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள்.
15 கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் மகனை ஒரு புதரின் அடியில் விட்டாள்.
16 ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் மகன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
17 சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: "ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார்.
18 போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்" என்றார்.
19 பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் மகனுக்கும் குடிக்கக் கொடுத்தாள்.
20 அவன் வளர்ந்து ஆளாகும்வரை தேவன் அவனேடு இருந்தார். இஸ்மவேல் பாலைவனத்தில் வாழ்ந்து பெரிய வேட்டைக்காரன் ஆனான். வில்லைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டான்.
21 அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர். உடன்படிக்கை
22 இவைகளுக்குப் பின்னர் அபிமெலேக்கும்பிகோலும் ஆபிரகாமோடு பேசினர். பிகோல் அபி மெலேக்கின் படைத் தளபதி. அவர்கள் ஆபிரகாமிடம், நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவன் உன்னோடு இருக்கிறார்.
23 எனவே இப்போது எனக்கு தேவனுக்கு முன்பு ஒரு வாக்குறுதி கொடு. நீ என்னோடும், என் பிள்ளைகளோடும் நியாயமாக நடந்துகொள்வேன் என்றும், நீ என்னோடும், நீ வாழ்கிற இந்தத் தேசத்தோடும் கருணையாய் இருப்பேன் என்றும் வாக்குறுதிகொடு. நான் உன்னோடு கருணையாய் இருப்பதுபோன்று நீ என்னோடு கருணையாய் இருப்பதாக உறுதியளி" என்று கேட்டனர்.
24 ஆபிரகாமோ, "நீங்கள் என்னை நடத்துவது போன்று நானும் உங்களை நடத்துவேன்" என்று சொன்னான்.
25 பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் அரசனின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக் கொண்டதாய் முறையிட்டான்.
26 ஆனால் அபிமெலேக்கோ, யார் இதைச் செய்தது என்று எனக்குத் தெரியாது, இதற்கு முன் நீ எனக்கு இதைப்பற்றி சொல்லவில்லை" என்று கூறினான்.
27 ஆகவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஆபிரகாம் அரசனுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் ஒப்பந்தத்தின் அத்தாட்சியாகக் கொடுத்தான்.
28 ஆபிரகாம் ஏழு பெண் ஆட்டுக்குட்டிகளையும் தனியாக அபிமெலேக்கு முன்பு நிறுத்தினான்.
29 அபிமெலேக்கு ஆபிரகாமிடம், ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்" என்று கேட்டான்.
30 அதற்கு ஆபிரகாம், "என்னிடத்திலிருந்து நீ இவற்றை ஏற்றுக்கொண்டால், அது நான் இந்தக் கிணற்றைத் தோண்டியதற்கு அடையாளமாகும்" என்றான்.
31 அதற்குப் பிறகு அந்தக் கிணறு பெயெர் செபா என்று அழைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்து கொண்ட இடம் என்று இதற்குப் பொருள்.
32 இவ்வாறு அபிமெலேக்கும் ஆபிரகாமும் அந்த இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் அபிமெலேக்கும் அவனது படையும் அந்த இடத்தை விட்டு பெலிஸ்தருடைய நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.
33 ஆபிரகாம் பெயெர்செபாவில் ஒரு புதிய மரத்தை நட்டு என்றென்றும் ஜீவிக்கும் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான்.
34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×