Bible Versions
Bible Books

Hebrews 8 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.
2 மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்து கொண்டிருக்கிறார்.
3 காணிக்கைகளையும் பலிகளையும் கொடுக்கும் பொருட்டு ஒரு பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் வழங்குவதற்கு ஏதோ ஒன்று இயேசுவுக்கும் தேவையாயிருக்கிறது.
4 நமது பிரதான ஆசாரியனும் இப்போது பூமியில் இருந்திருந்தால், ஆசாரியனாக இருக்கமாட்டார். ஏனெனில் சட்டம் விவரிக்கிற காணிக்கைகளை வழங்குகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.
5 அவர்கள் புரியும் சேவையானது பரலோகத்தில் உள்ள சேவையின் சாயலாகவும், நிழலாகவும் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பரிசுத்தக் கூடாரத்தை மோசே ஸ்தாபிக்கப் போகும்போது தேவன் எச்சரித்தார். மலையிலே உனக்கு நான் காட்டிய மாதிரியின்படியே நீ ஒவ்வொன்றையும் செய்ய உறுதியாய் இரு என்று தேவன் சொன்னார்.
6 மிக உயர்ந்த கடமையானது இயேசுவுக்குத் தரப்பட்டது என்பதே இதன் பொருள் ஆகும். மேலும் இதே முறையில் அவர் நடுவராக இருக்கிற உடன்படிக்கையும் உயர்வானதாகும். ஏனெனில், நல்ல வாக் குறுதிகளால் இந்த உடன்படிக்கை நிறுவப்பட்டது.
7 பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும்.
8 ஆனால் தேவன் மக்களிடம் சில பிழைகளைக் கண்டுபிடித்து அவர்களிடம், இஸ்ரவேல் மக்களோடும் யூதா மக்களோடும் ஒரு புதிய உடன்படிக்கையை நான் ஏற்படுத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது என்று கர்த்தர் சொல்கிறார் என்றார்.
9 அவர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று எகிப்துக்கு வெளியே வழி நடத்தியபோது அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்து கொண்ட உடன்படிக்கைபோல் அது இருக்காது. அது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில், அந்த உடன்படிக்கைக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாகத் தொடர்ந்து இருக்கவில்லை என்பதால் நான் அவர்களிடமிருந்து விலகினேன். அக்காரியங்களைக் கர்த்தர் சொன்னார்.
10 அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்து கொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது. நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன். நான் அவர்களின் தேவனாக இருப்பேன். அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள்.
11 அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது. ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள்.
12 ஏனெனில் நான் அவர்கள் எனக்கெதிராகச் செய்த தவறுகளை மன்னித்து விடுவேன். அவர்களின் பாவங்களை இனிமேல் நினையாது இருப்பேன். ஏரேமியா 31:31-34
13 தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×