Bible Versions
Bible Books

Jeremiah 46 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு இச்செய்திகள் வந்தன. இச்செய்திகள் பல்வேறு தேசங்களைப் பற்றியவை.
2 எகிப்து தேசத்தைப்பற்றிய செய்தி இது. பார்வோன் நேகோவின் படையைப்பற்றிய செய்தி இது. நேகோ எகிப்தின் அரசனாக இருந்தான். அவனது படை கர்கேமிசிலே தோற்கடிக்கப்பட்டது. கர்கேமிஷ் ஐபிராத்து நதிக்கரையில் இருக்கிறது. யோயாக்கீம் யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் கர்கேமிஷிலே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் படை பார்வோன்நேகோவின் படையை தோற்கடித்தது. யோயாக்கீம் அரசன் யோசியாவின் மகன். எகிப்துக்குக் கர்த்தருடைய வார்த்தை இதுதான்.
3 "உங்களது பெரியதும் சிறியதுமான கேடயங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். போருக்கு வாருங்கள்.
4 குதிரைகளைத் தயார் செய்யுங்கள். வீரர்களே, உங்கள் குதிரைகள் மீது ஏறுங்கள். போருக்கு உங்கள் இடத்துக்குப் போங்கள். உங்கள் தலைக்கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள். உங்கள் ஈட்டிகளைக் கூர்மைப்படுத்துங்கள். உங்கள் கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள்.
5 நான் என்ன பார்க்கிறேன்? அந்தப்படை பயந்திருக்கிறது வீரர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தைரியமான வீரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் அவசரமாக ஓடினார்கள். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்களைச் சுற்றிலும் ஆபத்து இருக்கிறது" கர்த்தர் இவற்றைக் கூறினார்.
6 "வேகமாக ஓடுகிறவன் ஓடவேண்டாம். பலமுடைய வீரர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் அனைவரும் இடறி விழுவார்கள். இது ஐப்பிராத்து நதிக்கரையில் வடக்கில் நிகழும்.
7 யார் நைல் நதியைப்போன்று வந்துக்கொண்டிருக்கிறார்கள். யார் அந்தப் பலமும் வேகமும் கொண்ட நதியைப்போன்று வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
8 எகிப்து நைல் நதியைப்போன்று புரண்டு வருகிறான். அந்த ஆற்றின் பலத்தையும் வேகத்தையும் போன்று எகிப்து வருகிறான். எகிப்து, ‘நான் வந்து பூமியை மூடுவேன். நான் நகரங்களையும் அவற்றில் உள்ள ஜனங்களையும் அழிப்பேன்" என்று கூறுகிறான்.
9 குதிரை வீரர்களே, போருக்குப் போய் ஏறுங்கள். தேரோட்டிகளே, வேகமாக ஓட்டுங்கள். தைரியமான வீரர்களே புறப்படுங்கள். கஷ் மற்றும் பூத்திலிருந்து வந்த வீரர்களே! உங்கள் கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். லீதிய வீரர்களே! உங்கள் வில்லைப் பயன்படுத்துங்கள்.
10 ஆனால் அந்த நேரத்தில், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரகிய ஆண்டவர் வெல்லுவார். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏதுவான தண்டனையை அவர் கொடுப்பார். கர்த்தருடைய பகைவர்கள் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெறுவார்கள். அது முடியும்வரை பட்டயம் பட்சிக்கும். அதன் இரத்தத்தாகம் தீர்ந்து திருப்தி அடையும்வரை பட்டயம் பட்சிக்கும். இது நிறைவேறும். ஏனென்றால், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவருக்கான பலி இது. அப்பலி, வடக்குத் தேசத்தில் ஐப்பிராத்து நதியின் எகிப்தியப் படை ஆகும்.
11 "எகிப்தே, கீலேயாத்துக்குப் போய் கொஞ்சம் மருந்தை பெற்றுக்கொள். பல மருந்துகளை நீ தயார் செய்வாய். ஆனால் அவை உதவாது. நீ குணமாக்கப்படமாட்டாய்.
12 தேசங்கள் உனது அழுகையைக் கேட்கும். உங்கள் அழுகை பூமி முழுவதும் கேட்கும். ஒரு ‘தைரியமான வீரன்’ இன்னொரு ‘தைரியமான வீரன்’ மேல் மோதுவான். இரண்டு தைரியமான வீரர்களும் ஒருவர்மேல் ஒருவர் விழுவார்கள்."
13 தீர்க்கதரிசியான எரேமியாவிடம் கர்த்தர் சொன்ன வார்த்தைகள் இதுதான். இந்த வார்த்தைகள் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சார் எகிப்தைத் தாக்கவருவது பற்றியதாகும்.
14 "எகிப்தில் இச்செய்தியை அறிவி. மிக்தோ நகரில் இதனைச் சொல். நோப்பிலும் தக்பானேசிலும் இதைச் சொல். ‘போருக்குத் தயாராகுங்கள். ஏனென்றால், உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுகிறார்கள்.’"
15 "எகிப்தே உனது பலமான வீரர்கள் கொல்லப்படுவார்கள். அவர்களால் நிற்க முடியாது. ஏனென்றால், கர்த்தர் அவர்களைக் கீழே தள்ளுவார்.
16 அவ்வீரர்கள் மீண்டும் மீண்டும் இடறுவார்கள், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள். அவர்கள், ‘எழு நம் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்லுவோம். நம் தாய் நாட்டிற்கு போகலாம். நம் பகைவர்கள் நம்மைத் தோற்கடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் வெளியேற வேண்டும்’ என்று சொல்லுவார்கள்.
17 அவர்களின் தாய்நாடுகளில் அவ்வீரர்கள் சொல்வார்கள், ‘எகிப்திய அரசனான பார்வோன் வெறும் ஆரவாரமாக இருக்கிறான். அவனது மகிமைக்குரிய காலம் முடிந்துவிட்டது."
18 இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது. அந்த அரசர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். "நான் என் ஜீவனில் ஆணையிட்டுச் சொல்கிறேன். ஒரு வல்லமைமிக்கத் தலைவன் வருவான். அவன் கடலருகில் உள்ள தாபோர்மலை மற்றும் கர்மேல் மலையைப் போன்றும் இருப்பான்.
19 எகிப்திய ஜனங்களே, உங்கள் பொருட்களை கட்டுங்கள். சிறைபிடிக்கப்படத் தயாராகுங்கள். ஏனென்றால், நோப் காலியான தேசமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அந்நகரங்கள் அழிக்கப்படும். அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
20 "எகிப்து அழகான பசுவைப் போன்று இருக்கிறது. ஆனால் குதிரை கொசுவானது அதனைத் துன்புறுத்துவதற்கு வடக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறது.
21 எகிப்தின் படையில் உள்ள கூலிவீரர்கள் கொழுத்த காளை கன்றுகளைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி ஓடுவார்கள். அவர்கள் தாக்குதலை எதிர்த்து பலமாக நிற்கமாட்டார்கள். அவர்களின் அழிவுக் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.
22 எகிப்து, தப்பிக்க முயலும்போது சுபசத்தமிடுகிற பாம்பைப்போல் உள்ளது. பகைவன் நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறான். எகிப்தியப் படை தப்பித்து ஓட முயன்றுக்கொண்டிருக்கிறது. எகிப்தைப் பகைவர்கள் கோடரியால் தாக்குவார்கள். அது மரங்களை மனிதர்கள் வெட்டுவது போன்றிருக்கும்."
23 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: "அவர்கள் எகிப்திய காடுகளை வெட்டித்தள்ளுவார்கள். அந்தக்காட்டில் (படை) ஏராளமான மரங்கள் (வீரர்கள்) இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் வெட்டித்தள்ளப்படும். பகை வீரர்கள் வெட்டுக்கிளிகளை விட அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். எவராலும் எண்ண முடியாதபடி அவர்கள் ஏராளமான வீரர்களாக இருக்கிறார்கள்.
24 எகிப்து அவமானப்படும். அவளை வடக்கேயிருந்து வரும் பகைவன் தோற்கடிப்பான்.
25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய அரசர்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன்.
26 நான் எல்லா ஜனங்களையும் அவர்களது பகைவர்களாலும் அவர்களைக் கொல்ல விரும்புகிறவர்களாலும் தோற்கடிக்கப்படச் செய்வேன். நான் அவர்களை நேபுகாத்நேச்சாரான பாபிலோனின் அரசனிடமும் அவனது வேலைக்காரர்களிடமும் கொடுப்பேன்" "நீண்ட காலத்துக்கு முன்னால், எகிப்து சமாதானமாக வாழ்ந்தது. இவ்வெல்லா துன்பங்களுக்கும் பிறகு, அது பழையபடி சமாதானமாக மீண்டும் வாழும்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
27 "யாக்கோபே, என் ஊழியக்காரனே, பயப்படாதே! இஸ்ரவேலே! அஞ்ச வேண்டாம்! அந்தத் தூரமான இடங்களிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன். சிறைப்பட்டிருக்கிற நாடுகளிலிருந்து நான் உன் பிள்ளைகளை மீட்பேன். யாக்கோபு மீண்டும் சமாதானமும் பாதுகாப்பும் பெறுவான். அவனை எவரும் பயமுறுத்த முடியாது."
28 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார், "யாக்கோபே, என் வேலைக்காரனே! பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவேன். ஆனால் உன்னை நான் முழுவதுமாக அழிக்கமாட்டேன். ஆனால் அந்த நாடுகளை எல்லாம் அழிப்பேன். நீ செய்த தீயச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். எனவே நான் உன்னைத் தண்டனையிலிருந்து தப்பிக்கும்படி விடமாட்டேன். நான் உன்னை ஒழுங்குப்படுத்துவேன் ஆனால் நான் நியாயமாக இருப்பேன்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×