Bible Versions
Bible Books

Job 28 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு, ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு.
2 மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள், செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது.
3 வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள். அவைகளை குகைகளின் ஆழமான பகுதிகளில் தேடுகிறார்கள். ஆழ்ந்த இருளில் அவர்கள் பாறைகளைத் தேடிப்பார்க்கிறார்கள்.
4 தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள். ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள். மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள்.
5 நிலத்தின் மேல் உணவு விளைகிறது, ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது.
6 நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும். அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.
7 நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது. அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை.
8 காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை. சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.
9 வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள். அப்பணியாட்கள் பர்வ தங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.
10 வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள். எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
11 பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள். அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.
12 ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்? நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம், பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது. கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது! ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ, நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது! பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது. சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல. தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
20 "எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது? எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது. வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை. நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
23 "தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார். தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது. வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார். கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
26 எங்கே மழையை அனுப்புவதென்றும், இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார். ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
28 தேவன் மனிதரை நோக்கி, "கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள். அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×