Bible Versions
Bible Books

John 18 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக் கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப் போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.
2 யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார்.
3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.
4 இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.
5 அதற்கு அவர்கள் நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை என்றனர். இயேசுவோ, நானே இயேசு என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.)
6 இயேசு அவர்களிடம், நான்தான் இயேசு என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
7 இயேசு மீண்டும் அவர்களிடம், யாரைத் தேடுகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அதற்கு, நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை என்றனர்.
8 இயேசு அதற்கு, நான்தான் இயேசு என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
9 ԅநீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.
10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப் போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்)
11 இயேசு பேதுருவிடம் உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும் என்றார்.
12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி
13 அன்னாவிடம் கொண்டு வந்தனர். இவன் காய்பாவின் மாமனார். காய்பா அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன்.
14 இந்தக் காய்பாதான் ஏற்கெனவே யூதர்களிடம், ԅஎல்லா மக்களுக்காகவும் ஒரு மனிதன் மரிப்பது நல்லது என்று சொன்னவன்.
15 சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான்.
16 ஆனால் பேதுரு வாசலுக்கு வெளியே காத்திருந்தான். தலைமை ஆசாரியனைத் தெரிந்த சீஷன் வெளியே வந்தான். அவன் கதவைத் திறந்த பெண்ணோடு பேசினான். பிறகு அவன் பேதுருவையும் உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.
17 வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே? என்று கேட்டாள். அதற்குப் பேதுரு இல்லை. நான் அல்ல என்றான்.
18 அது குளிர்காலம். எனவே வேலைக்காரர்களும், சேவகர்களும் நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு குளிர் காய்ந்தனர். பேதுருவும் அவர்களோடு குளிர்காய நின்று கொண்டான்.
19 தலைமை ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீஷர்களைக் குறித்து விசாரித்தான். அதோடு அவரது போதனைகளைக் குறித்து விசாரித்தான்.
20 அதற்கு இயேசு, நான் மக்களிடம் எப்பொழுதும் வெளிப்படையாகவே பேசிவந்தேன். நான் எப் பொழுதும் யூதர்கள் கூடும் அரங்கங்களிலும், ஆலயங்களிலுமே உபதேசித்து இருக்கிறேன். யூதர்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்கள். நான் எதையும் இரகசியமாகப் பேசவில்லை.
21 அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை விசாரிக்கிறீர்கள்? என் போதனைகளைக் கேட்டவர்களை விசாரித்துப் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றார்.
22 இயேசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் அறை அறைந்தான். அவன், நீ தலைமை ஆசாரியனிடம் அந்த முறையில் பதில் சொல்லக் கூடாது என்று எச்சரித்தான்.
23 அதற்கு இயேசு, நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் எது தப்பு என்று இங்கு இருக்கிற எல்லாருக்கும் சொல். ஆனால் நான் சொன்னவை சரி என்றால் பிறகு ஏன் என்னை அடிக்கிறாய்? என்று கேட்டார்.
24 ஆகையால் அன்னா இயேசுவைத் தலைமை ஆசாரியனாகிய காய்பாவிடம் அனுப்பிவைத்தான். இயேசு அப்பொழுது கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார்.
25 சீமோன் பேதுரு நெருப்பருகில் நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் அந்த மனிதனின் சீஷர்களுள் நீயும் ஒருவன்தானே? என்று கேட்டார்கள். பேதுரு அதனை மறுத்தான். அவன், இல்லை. நான் அல்ல என்றான்.
26 தலைமை ஆசாரியனின் வேலைக்காரர்களுள் ஒருவன் அங்கு இருந்தான். அவன் பேதுருவால் காது அறுபட்டவனின் உறவினன். அவன், அந்தத் தோட்டத்தில் நான் உன்னையும் அந்த மனிதனோடு பார்த்தேன் என்று நினைக்கிறேன் என்றான்.
27 ஆனால் பேதுரு மீண்டும், இல்லை. நான் அவரோடு இருக்கவில்லை என்று கூறினான். அப்பொழுது சேவல் கூவிற்று.
28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர்.
29 எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்? என்று கேட்டான்.
30 அதற்கு யூதர்கள், அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால் தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம் என்றனர்.
31 பிலாத்து யூதர்களிடம், யூதர்களாகிய நீங்கள் இவனை அழைத்துக்கொண்டு போய் உங்கள் விதி முறைகளின்படி நியாயம் தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள், எவரையும் மரண தண்டனைக்குட்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லையே என்றனர்.
32 (தான் எவ்வாறு மரிக்கப்போகிறேன் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது)
33 பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். நீ யூதர்களின் அரசரா? என்று அவரிடம் கேட்டான்.
34 இயேசு அவனிடம், இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா? என்று கேட்டார்.
35 பிலாத்து அதற்கு, நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டு வந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்? என்று கேட்டான்.
36 எனது இராஜ்யம் இந்த உலகத்துக்கு உரியதன்று. அது இந்த உலகத்தோடு தொடர்புடையது எனில் என் சேவகர்கள் எனக்காகப் போரிட்டிருப்பார்கள். நான் யூதர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்க மாட்டேன். எனவே என் இராஜ்யம் இவ்விடத்திற்கு உரியதன்று என்று இயேசு சொன்னார்.
37 பிலாத்து அவரிடம், அப்படியானால் நீ அரசன் தானோ? என்று கேடடான். அதற்கு இயேசு, நான் அரசன் என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையுவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான் என்றார்.
38 பிலாத்து, உண்மை என்பது என்ன? என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை.
39 பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா? என்று கேட்டான்.
40 அதற்கு யூதர்கள், இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள் என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×