Bible Versions
Bible Books

John 4 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 யோவானைவிட இயேசு மிகுதியான மக்க ளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர்.
2 (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப் பற்றி இயேசுவும் அறிந்து கொண்டார்.
3 ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார்.
4 கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.
5 சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது.
6 யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை.
7 ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு என்று கேட்டார்.
8 (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)
9 குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண் என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)
10 தேவன் கொடுப்பவற்றைப் பற்றி நீ அறிய வில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன் என்றார் இயேசு.
11 ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே!
12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர் தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள் என்று அந்தப் பெண் சொன்னாள்.
13 இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும்.
14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும் என்று இயேசு பதிலுரைத்தார்.
15 ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது எனக் கூறினாள் அந்தப் பெண்.
16 போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா என்றார் இயேசு.
17 ஆனால், எனக்குக் கணவன் இல்லையே என்றாள் அப்பெண். உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான்.
18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய் என்றார் இயேசு.
19 உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன்.
20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம் தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள் என்றாள் அந்தப் பெண்.
21 பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்து கொண்டிருக்கிறது.
22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்து கொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்து கொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது.
23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்து கொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும்தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார்.
24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும் என்றார் இயேசு.
25 கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார் என்றாள் அப்பெண்.
26 பிறகு இயேசு, இப்பொழுது அவர் தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான் தான் மேசியா என்றார்.
27 அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், உங்களுக்கு என்ன வேண்டும்? என்றோ ஏன் நீங்கள் அவளோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என்றோ கேட்கவில்லை.
28 பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள்.
29 அங்கே அவள் மக்களிடம், நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன் னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம் என்றாள்.
30 ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளி யேறி இயேசுவைக் காண வந்தனர்.
31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக் கொண்டனர்.
32 ஆனால் இயேசுவோ, என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்க ளுக்கு ஒன்றும் தெரியாது என்றார்.
33 ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டு வந்திருப்பார்கள் என்று சீஷர் கள் தமக்குள் பேசிக் கொண்டனர்.
34 எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வது தான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பது தான் எனது உணவாக இருக்கிறது.
35 நீங்கள் பயிரை நடும்போது அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல் வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப் போன்று இருக்கிறார்கள்.
36 இப்பொழுது கூட அறுவடை செய்கிறவன் சம் பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ் வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கி றவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவ னோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சிய டைய இயலும்.
37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கி றவன் இன்னொருவன் என்கிற பழமொழி இத னால் உண்மையாகிறது.
38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட் டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள் என்று இயேசு கூறினார்.
39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால் தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட் டார் என்று கூறி இருந்தாள்.
40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்க ளோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார்.
41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்ன வற்றின் மூலம் அவரை நம்பினர்.
42 அவர்கள், முதலில் நீ சொன்னவற்றையெல் லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற் றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண் மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப் போகிறவர் என்று நம்புகிறோம் என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.
43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார்.
44 (இயேசு ஏற்கெனவே ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான் என்று சொல்லியிருந்தார்)
45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்து கொண்டவர்கள்.
46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான்.
47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான்.
48 நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள் என்று இயேசு சொன்னார்.
49 அந்த அதிகாரியோ, ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தான்.
50 அதற்கு இயேசு, போ, உன் மகன் பிழைப்பான் என்றார். அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான்.
51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். உங்கள் மகன் குணமாகி விட்டான் என்று அவர்கள் சொன்னார்கள்.
52 என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்? என்று கேட்டான் அவன். நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது என்றார்கள் வேலைக்காரர்கள்.
53 இயேசு, உன் மகன் பிழைப்பான் என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்து கொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.
54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×