Bible Versions
Bible Books

Jonah 3 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர்,
2 "அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்" என்றார்.
3 எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.
4 யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா," 40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!" என்றார்.
5 நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உப வாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.
6 நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான்,
7 அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான். அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை: கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.
8 ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும்.
9 பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்."
10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×