Bible Versions
Bible Books

Judges 21 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 மிஸ்பாவில் இஸ்ரவேல் மனிதர்கள் ஒரு வாக்குறுதி செய்து கொண்டனர். இதுவே அவர்கள் செய்த வாக்குறுதி: "நம் கோத்திரத்தில் யாருடைய மகளும், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த ஒருவனை மணக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது."
2 இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். மாலைவரைக்கும் தேவனுக்கு முன்பு அமர்ந்தனர். அவர்கள் அங்கு உட்கார்ந்திருந்து உரக்க அழுதனர்.
3 அவர்கள் தேவனிடம், "கர்த்தாவே, நீர் இஸ்ரவேலரின் தேவன். ஏன் இந்தக் கொடியக் காரியம் எங்களுக்கு நேர்ந்தது? ஏன் ஒரு கோத்திரத்தினர் இஸ்ரவேலரிலிருந்து மறையவேண்டும்?" என்றார்கள்.
4 மறுநாள் அதிகாலையில், இஸ்ரவேலர் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் அப்பலிபீடத்தில் கர்த்தருக்கென்று தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்தினார்கள்.
5 அப்போது இஸ்ரவேலர், "கர்த்தருக்கு முன்பாக எங்களுடன் இங்கு வந்து சேராத இஸ்ரவேல் கோத்திரங்களில் யாரேனும் இருக்கிறார்களா?" என்றனர். அவர்கள் தீவிரமான வாக்குறுதி கொடுத்திருந்ததினால் இந்த கேள்வியைக் கேட்டனர். மிஸ்பாவில் பிறக் கோத்திரங்களோடு வந்து சேராதவன் கொல்லப்படுவான் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
6 தமது உறவினரான பென்யமீன் ஜனங்களுக்காக இஸ்ரவேலர் துக்கமடைந்தனர். அவர்கள், "இன்று இஸ்ரவேலிலிருந்து ஒரு கோத்திரம் விலக்கப்பட்டுவிட்டது.
7 கர்த்தருக்கு முன் நாம் ஒரு வாக்குறுதி அளித்தோம். பென்யமீன் Ԕகோத்திரத்தைச் சார்ந்தவனை நமது பெண்கள் மணக்க அனுமதிப்பதில்லை என்றோம். பென்யமீன் ஆட்களுக்கு மனைவியர் கிடைப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?" என்றார்கள்.
8 பின் இஸ்ரவேலர், "மிஸ்பாவிற்கு இஸ்ரவேலின் எந்தக் கோத்திரத்தினர் வந்து சேரவில்லை? நாம் கர்த்தருக்கு முன்னே ஒருமித்துக் கூடியுள்ளோம். இங்கு ஒரு குடும்பம் நிச்சயமாக வரவில்லை!" என்றனர்.
9 இஸ்ரவேலர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஒவ்வொருவராக எண்ணிக்கை எடுத்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசிலிந்து ஒருவரும் வரவில்லை என்பதைக் கண்டு கொண்டார்கள்.
10 எனவே இஸ்ரவேலர் 12,000 வீரர்களை கீலேயாத்திலுள்ள யாபேசு நகரத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் வீரரிடம், "கீலேயாத்திலுள்ள யாபேசுக்குப் போங்கள். உங்கள் வாளால் அங்கு வாழும் அனைவரையும் பெண்களையும் குழந்தைகளையும் கூட கொல்லுங்கள்.
11 நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அங்குள்ள எல்லா ஆண்களையும் கொல்ல வேண்டும். ஆணோடு பாலின உறவுகொண்ட பெண்களையெல்லாம் கொல்லுங்கள். ஆனால் ஆணோடு பாலின உறவு கொண்டிராத கன்னிகைகளைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். எனவே அவ்வீரர்கள் அப்படியே செய்தார்கள்.
12 ஆண்களோடு பாலின உறவுகொண்டிராத 400 கன்னிகைகளை அந்த 12,000 வீரர்களும் கண்டனர். சீலோவிலுள்ள முகாமிற்கு அவர்கள் அந்த கன்னிகைகளை அழைத்து வந்தனர். சீலோ என்னும் இடம் கானான் தேசத்தில் இருந்தது.
13 பின்பு இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பென்யமீன் மனிதரோடு சமாதானம் செய்து கொள்ள முன் வந்தனர். ரிம்மோன் பாறை என்னுமிடத்தில் பென்யமீன் ஆட்கள் இருந்தனர்.
14 எனவே பென்யமீன் மனிதர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசில் கொல்லாமல் விட்ட பெண்களை அவர்களுக்கு இஸ்ரவேலர் கொடுத்தனர். ஆனால் பென்யமீன் மனிதருக்கு வேண்டிய எண்ணிக்கைக்குப் பெண்கள் போதவில்லை.
15 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்காக கவலைப்பட்டனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களிலிருந்து கர்த்தர் அவர்களை பிரித்ததற்காக இஸ்ரவேலர் வருந்தினர்.
16 இஸ்ரவேலின் தலைவர்கள், "பென்யமீன் கோத்திரத்தின் பெண்கள் கொல்லப்பட்டனர். உயிரோடிருக்கிற பென்யமீன் ஆட்களுக்கு எங்ககிருந்து பெண்களைத் தருவோம்?
17 உயிரோடிருக்கிற பென்யமீன் மனிதர்கள் தம் தலைமுறை தொடர்வதற்காக பிள்ளைகளைப் பெறுதல் வேண்டும். இஸ்ரவேலின் ஒரு கோத்திரம் அழிந்து போகாதபடிக்கு இது நடைபெற வேண்டும்.
18 ஆனால் பென்யமீன் மனிதரை மணந்து கொள்ள நம் பெண்களை அனுமதிக்க முடியாது. நாம் இந்த வாக்குறுதி அளித்துள்ளோம்: ‘பென்யமீனைச் சேர்ந்தவனுக்குப் பெண் கொடுக்கிற எவனும் சபிக்கப்படுவான்.
19 நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சீலோ நகரத்தில் கர்த்தருடைய பண்டிகை காலம் இது. ஒவ்வொரு ஆண்டும் அப்பண்டிகை நடக்கிறது" என்றனர். (சீலோ நகரம் பெத்தேல் நகரத்திற்கு வடக்கிலும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதையின் கிழக்கிலும் உள்ளது. அது லிபோனா நகரத்திற்குத் தெற்கேயும் இருக்கிறது.)
20 எனவே தலைவர்கள் பென்யமீன் கோத்திரத்திற்கு தங்கள் யோசனையைத் தெரிவித்தனர். அவர்கள், "போய் திராட்சைத் தோட்டங்களில் மறைந்துகொள்ளுங்கள்.
21 பண்டிகைச் சமயத்தில் நடன மாடும்படி சீலோ நகர இளம் பெண்கள் வருகிற சமயத்தைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அப்போது திராட்சைத் தோட்டங்களில் உங்கள் மறைவிடங்களில் இருந்து ஓடி வாருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் சீலோ நகரத்து கன்னிகைகளில் ஒருத்தியை எடுத்துக்கொள்ளலாம். அந்த கன்னிகைகளை பென்யமீன் தேசத்திற்குக் கொண்டு சென்று மணந்துகொள்ளுங்கள்.
22 அந்த கன்னிகைகளின் தந்தையாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிடுவார்கள். ஆனால் நாங்கள், ‘பென்யமீன் மனிதரிடம் இரக்கம் காட்டுங்கள். அப்பெண்களை அவர்கள் மணந்துகொள்ளட்டும். அவர்கள் உங்கள் பெண்களைத்தானே கொண்டு சென்றார்கள். அவர்கள் உங்களோடு போர் தொடுக்கவில்லை. அவர்களே கன்னிகைகளை எடுத்துச்சென்றதால், நீங்கள் தேவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை. நீங்கள் பென்யமீன் ஆட்களுக்கு உங்கள் பெண்களை மணம் முடித்து வைப்பதில்லை என்றுதானே வாக்குறுதி அளித்தீர்கள். நீங்களே பென்யமீன் ஆட்களுக்குப் பெண்களைக் கொடுக்கவில்லை. அவர்களே உங்களிடமிருந்து பெண்களை எடுத்துச்சென்றார்கள். எனவே நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறவில்லை’ என்போம்" என்றார்கள்.
23 அவ்வாறே பென்யமீன் ஆட்கள் செய்தார்கள். அந்த கன்னிகைகள் நடனமாடி வரும்போது, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்னைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் அப்பெண்களைக் கவர்ந்து சென்று, மணந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்குப் போனார்கள். அந்தேசத்தில் மீண்டும் நகரங்களை கட்டி, அந்நகரங்களில் குடியேறினார்கள்.
24 பின் இஸ்ரவேலர் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்கும் கோத்திரங்களுக்கும் சென்றனர்.
25 அந்நாட்களில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருவனும் தனக்கு சரியெனக் கருதியதைச் செய்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×