Bible Versions
Bible Books

Mark 16 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர்.
2 வாரத்தின் முதல்நாளில் அப் பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது.
3 அப்பெண்கள் ஒருவருக்கொருவர், கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்? என்று பேசிக்கொண்டனர்.
4 அவர்கள் கல்லறையின் அருகில் வந்தபோது வாசலில் வைத்திருந்த கல் விலக்கப்பட்டிருந்தது. அது மிகப் பெரிய கல்.
5 அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.
6 ஆனால் அந்த மனிதன், அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம்.
7 இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள் என்றான்.
8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
9 இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார்.
10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச் சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுது கொண்டிருந்தனர்.
11 ஆனால் மரியாளோ, இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன் என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை.
13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும்அவர்களைக் கடிந்து கொண்டார்.
15 பின்பு அவர்களிடம், உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்.
16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான்.
17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர்,
18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர் என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.
19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார்.
20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×