Bible Versions
Bible Books

Matthew 11 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கும் இவற்றைக் கூறி முடித்தார். பின்னர் அங்கிருந்து கலிலேயாவின் நகரங்களுக்குப் போதனை செய்வதற்காகச் சென்றார்.
2 யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான்.
3 யோவானின் சீஷர்கள் இயேசுவைக்கண்டு, "யோவான் வருவதாகக் கூறிய மனிதர் நீங்கள்தானா அல்லது நாங்கள் வேறொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?" என்று கேட்டனர்.
4 இயேசு அவர்களிடம், "யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள்.
5 குருடர்கள் பார்வை பெறுகிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள். தொழு நோயாளிகள் குணமாகிறார்கள். செவிடர்கள் கேட்கும் சக்தி பெறுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6 என்னை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்" என்று பதில் சொன்னார்.
7 யோவானின் சீஷர்கள் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு அங்கிருந்த மக்களிடம் யோவானைப் பற்றிப் பேசலானார். இயேசு அவர்களிடம், "வானாந்திரத்திற்கு எதைக் காண்பதற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலைக் காண்பதற்காகவா? இல்லை.
8 உண்மையில் எதைக் காணச் சென்றீர்கள்? சிறந்த ஆடைகளை உடுத்திய மனிதனைக் காண்பதற்கா? இல்லை சிறந்த ஆடைகளை உடுத்திக் கொள்கிறவர்கள் அரண்மனைகளில்தான் வசிக்கிறார்கள்.
9 அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன்.
10 ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன். உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’ என்று கூறினார்.மல்கியா 3:1
11 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராஜ்யத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவன்.
12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள்.
13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின.
14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் எனச் சொல்கின்றன.
15 என் பேச்சைக் கேட்பவர்களே, கவனியுங்கள்.
16 "இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,
17 ‘உங்களுக்காக இசைத்தோம், ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை. சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம், ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’ என்று அழைக்கிறது.
18 மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப் போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.
19 மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது."
20 பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை.
21 இயேசு, "கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள்.
22 நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.
23 கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும்.
24 ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்" என்று கூறினார்.
25 பிறகு இயேசு, "பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்.
26 ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்" என்றார்.
27 "என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார்.
28 "களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன்.
29 என் பணிகளை ஏற்றுக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள்.
30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது" என்று இயேசு கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×