Bible Versions
Bible Books

Matthew 20 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "பரலோக இராஜ்யமானது சிறிது நிலம் வைத்திருந்த ஒருவனைப் போன்றது, அவன் தனது நிலத்தில் திராட்சை விளைவித்தான். ஒரு நாள் காலை தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிப் போனான்.
2 ஒரு நாள் வேலைக்கு ஒரு வெள்ளிக்காசு கூலி தர அவன் ஒத்துக் கொண்டான். பிறகு வேலை ஆட்களைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பினான்.
3 "சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
4 எனவே அவன் அவர்களிடம், "‘நீங்கள் சென்று என் தோட்டத்தில் வேலை செய்தால், நீங்கள் செய்யும் வேலைக்குத் தகுந்தாற்போல உங்களுக்கு ஊதியம் தருகிறேன்’ என்றான்.
5 எனவே, அவர்களும் அவன் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றார்கள். மீண்டும் அவன் பன்னிரண்டு மணி அளவிலும் மூன்றுமணி அளவிலும் வெளியில் சென்று, ஒவ்வொரு முறையும் மேலும் சிலரைத் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தான்.
6 மீண்டும் ஐந்து மணி அளவில் சந்தைவெளிக்குச் சென்றான். மேலும் சிலர் அங்கே நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம், ‘ஏன் நாள் முழுக்க வேலை எதுவும் செய்யாமல் இங்கே நின்றிருந்தீர்கள்’ என்று கேட்டான்.
7 "அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு யாரும் வேலை தரவில்லை’ என்றார்கள். "அதற்கு அந்த திராட்சைத் தோட்டக்காரன், ‘அப்படியானால், நீங்கள் என் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யலாம்’ என்றான்.
8 "அன்று மாலை திராட்சைத் தோட்டக்காரன் வேலைக்காரர்களைக் கவனிக்கும் மேற்பார்வையாளனிடம், "வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்குப் பணம் கொடுத்துவிடு. நான் கடைசியாக அழைத்து வந்தவர்களுக்கு முதலில் பணம் கொடு. இப்படியே அனைவருக்கும் நான் முதலில் அழைத்து வந்தவன் வரைக்கும் பணம் கொடு" என்றான்.
9 "மாலை ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள் தங்கள் கூலியை வாங்க வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி நாணயம் கிடைத்தது.
10 பின்னர் முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் தங்கள் கூலியைப் பெற வந்தபொழுது, தங்களுக்கு அதிகக் கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கும் தலைக்கு ஒரு வெள்ளி நாணயமே கிடைத்தது.
11 அவர்கள் ஒரு வௌ்ளி நாணயம் மட்டுமே கூலியாகக் கிடைத்தபொழுது, தோட்டத்துச் சொந்தக்காரனிடம் புகார் செய்தார்கள்.
12 அவர்கள், "கடைசியாக வேலைக்கு வந்தவர்கள், ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். ஆனால், நாங்கள் நாள் முழுவதும் வெயிலில் கடுமையாக உழைத்துள்ளோம். ஆனால், எங்களுக்குச் சமமாக அவர்களுக்கும் கூலி கொடுத்துள்ளீர்கள்’ என்று புகார் கூறினார்கள்.
13 "ஆனால் தோட்டக்காரனோ அந்த ஆட்களில் ஒருவனிடம், ‘நண்பனே, நான் உனக்கு சரியாகவே கூலி கொடுத்துள்ளேன். ஒரு வெள்ளி நாணயத்திற்கு வேலை செய்ய ஒப்புக் கொண்டாய். சரிதானே?
14 எனவே, உன் கூலியைப் பெற்றுக்கொண்டு செல். நான் கடைசியாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் உனக்கும் சமமாகவே கூலி கொடுக்க விரும்புகிறேன்.
15 "நான் என் பணத்தில் என் விருப்பப்படி செய்யலாம். நான் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையா?’ என்றுகூறினான்.
16 ஆகவே,இப்பொழுது கடைசி ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் முதல் ஸ்தானத்திற்குச் செல்வார்கள். மேலும் இப்பொழுது முதல் ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் கடைசி ஸ்தானத்திற்குச் செல்வார்கள்" என்றார்.
17 இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம்,
18 "நாம் எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறோம். தலைமை ஆசாரியர்களிடமும் வேதபாரகர்களிடமும் மனித குமாரன் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனித குமாரன் இறக்க வேண்டும் என்பார்கள்.
19 யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்" என்று கூறினார்.
20 பின்னர், செபதேயுவின் மகன்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள்.
21 இயேசு அவளிடம், "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டார். அவள், "எனது ஒரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்" என்று கேட்டாள்.
22 அதைக் கேட்ட இயேசு அவளது மகன்களிடம், "நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேட்டார். "ஆம், எங்களால் முடியும்" என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம், "மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப் போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை" என்றார்.
24 இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள்.
25 இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம் "யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார் கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்க ளின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகி றார்கள்.
26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும்.
27 உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும்.
28 மனித குமாரனும் அப்படியே. தனக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதற்காக அவர் வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே மனித குமாரன் வந்தார். பலரது வாழ்வை இரட்சிப்பதற்கு தன் உயிரைக் கொடுக்கவே மனித குமாரன் வந்தார்" என்று கூறினார்.
29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்" என்று உரக்கக் கூவினார்கள்.
31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும் மேலும் சத்தமாக, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்" என்று கூவினார்கள்.
32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து, "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
33 அதற்குக் குருடர்கள், "ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்" என்றார்கள்.
34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×