Bible Versions
Bible Books

Matthew 7 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார்.
2 நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
3 உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்?
4 ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’ என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது.
5 மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.
6 புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.
7 "தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும்.
8 ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
9 "உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை.
10 அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை.
11 நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?
12 "மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும்.
13 "பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள்.
14 ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.
15 "போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள்.
16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை.
17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும்.
18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது.
19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்.
20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.
21 "என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும்.
22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள்.
23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.
24 "என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான்.
25 கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.
26 என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான்.
27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது."
28 இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப் படைந்தனர்.
29 வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×