Bible Versions
Bible Books

Numbers 12 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்து கொண்டதால் அவனைப் பற்றி அவர்கள் அவதூறு பேசினார்கள். அவன் எத்தியோப்பிய பொண்னை மணந்து கொண்டது சரியல்ல என அவர்கள் எண்ணினார்கள்.
2 அவர்கள் தமக்குள், "ஜனங்களோடு பேசுவதற்கு கர்த்தர் மோசே ஒருவனை மட்டும் பயன்படுத்தவில்லை. எங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசினார்" என்று கூறிக்கொண்டனர்! கர்த்தர் இதனைக் கேட்டார்.
3 (மோசே மிகவும் தாழ்மையான குணமுள்ளவன். அவன் தனக்குள் பெருமையுள்ளவன் அல்ல. பூமியிலுள்ள மற்ற மனிதர்களைவிட அவன் மிகவும் சாந்த குணமுள்ளவன்.)
4 எனவே கர்த்தர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகிய மூவருடனும் பேசி, "நீங்கள் மூவரும் இப்பொழுது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வாருங்கள்" என்று சொன்னார்.
5 உயரமான மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் நின்று: "ஆரோன்! மிரியாம்!" என்று அழைத்தார். ஆரோனும் மிரியாமும் அவரிடம் சென்றனர்.
6 தேவன், "நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்குத் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களுக்குக் காட்சியளிப்பேன். அவர்களோடு கனவில் பேசுவேன்.
7 ஆனால் மோசே அத்தகையவன் அல்ல. மோசே எனது உண்மையான ஊழியன். நான் அவனை எனது வீட்டில் எல்லா விதத்திலும் நம்பிக்கையும், உண்மையுள்ளவனாகவும் காண்கிறேன்.
8 நான் அவனோடு பேசும்போது, முகமுகமாய் பேசுகிறேன். மறைபொருளான கதைகளையல்ல, அவன் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நான் தெளிவாகக் கூறிவிடுவேன். கர்த்தரின் தோற்றத்தையே மோசே பார்க்க இயலும். எனவே, ஏன் நீங்கள் எனது ஊழியனான மோசேக்கு எதிராகப் பேசத் துணிந்தீர்கள்?" என்று கேட்டார்.
9 கர்த்தர் அவர்கள் மீது பெருங்கோபத்தோடு இருந்தபடியால் அவர்களைவிட்டு கர்த்தர் விலகினார்.
10 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பிச் சென்றது. ஆரோன் திரும்பி மிரியாமைப் பார்த்தான். அவளது தோல் பனியைப் போன்று வெளுத்திருந்தது. அவளுக்குப் பயங்கரமான தொழுநோய் ஏற்பட்டது!
11 பிறகு ஆரோன் மோசேயிடம், "ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முட்டாள்தனமாக பாவம் செய்துவிட்டோம்.
12 மரித்துப் பிறந்த குழந்தையைப் போல அவள்தன் தோலை இழக்க விட்டுவிடாதிரும்" என்றான். (சில வேளையில் சில குழந்தைகள் பாதிதோல் அழுகிய நிலையில் மரித்துப் பிறப்பதுண்டு.)
13 எனவே மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் செய்து, "தேவனே தயவு செய்து இவளது தொழு நோயைப் போக்கிவிடும்" என்றான்.
14 கர்த்தர் மோசேயை நோக்கி, "அவளது தந்தை அவள் முகத்தின் மீது உமிழ்ந்தால், அவளுக்கு ஏழு நாட்கள் அவமானமாக இருக்கும். எனவே, அவளை முகாமிற்கு வெளியே ஏழு நாட்கள் வைத்திரு. அதற்குப் பிறகு அவள் குணமாவாள். பின்னர் அவள் கூடாரத்திற்குத் திரும்பலாம்" என்றார்.
15 ஆகையால் அவர்கள் மிரியாமை ஏழு நாட்கள் முகாமிற்கு வெளியே வைத்திருந்தனர். அவளைத் திரும்பக் கூடாரத்திற்குள் அழைத்துக் கொள்ளும்வரை அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
16 அதன்பின் அவர்கள் ஆஸ்ரோத்தை விட்டு பாரான் பாலைவனத்துக்குச் சென்று, அங்கே முகாமிட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×