Bible Versions
Bible Books

Proverbs 15 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 ஒரு சமாதானமான பதில் கோபத்தைமறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும்.
2 அறிவுள்ளவன் பேசும்போது மற்றவர்கள் அதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் அறிவற்றவன் முட்டாள்தனமாகவே பேசுவான்.
3 எல்லா இடங்களிலும் என்ன நடை பெறுகிறது என்று கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நல்லவர்கள் தீயவர்கள் அனைவரையும் கர்த்தர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
4 தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும்.
5 முட்டாள்தனமான மனிதன் தன் தந்தையின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிடுவான். ஆனால் அறிவுள்ளவனோ, ஜனங்கள் தனக்குப் போதிக்கவரும்போது கவனித்துக் கேட்கிறான்.
6 நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன.
7 அறிவுள்ளவர்கள் பேசும் பேச்சு உனக்குப் புதிய தகவல்களைத் தருபவையாக இருக்கும். அறிவில்லாதவர்கள் பேசுவதோ கேட்கப் பயனில்லாததாக இருக்கும்.
8 தீயவர்கள் கொடுக்கிற பலிகளைக் கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார்.
9 தீயவர்களின் வாழ்க்கை முறையைக் கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களைக் கர்த்தர் நேசிக்கிறார்.
10 ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.
11 கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார்.
12 அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.
13 ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.
14 அறிவுள்ளவன் மேலும் அறிவைப் பெற விரும்புகிறான். அறிவில்லாதவனோ மேலும் முட்டாள் ஆவதை விரும்புகிறான்.
15 சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.
16 ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.
17 வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது.
18 எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக் குரியவர்கள்.
19 எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்.
20 அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.
21 முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.
22 ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.
23 நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.
24 வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான்.
25 வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
26 கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.
27 ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வர வழைத்துக் கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை.
28 நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.
29 தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.
30 ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக் கொள்ளச் செய்கின்றன.
31 நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.
32 ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான்.
33 கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×