Bible Versions
Bible Books

Psalms 35 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தாவே, என் யுத்தங்களையும் என் போர்களையும் நீரே நடத்தும்.
2 கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும். எழுந்திருந்து எனக்கு உதவும்.
3 ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும். கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, "நான் உன்னைக் காப்பாற்றுவேன்" என்று கூறும்.
4 சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும். அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அவர்களை வெட்கமடையச் செய்யும்.
5 காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
6 கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
7 நான் பிழையேதும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள். காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
8 எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும். அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும். அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
9 அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன். அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
10 "கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை. கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர். ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமி ருந்து அவர்களைக் காப்பாற்றுகிறீர்" என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன். ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர். கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன். உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா?
14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன். அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன். தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன். அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன். துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.
15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர். அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல. ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை. அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள்.
16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள். அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்? அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள். கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத் தீயோரிடமிருந்துஎன்ஆருயிரைக்காப்பாற்றும்.
18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன். வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன்.
19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது. தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.
20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை. இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள்.
21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து "ஆஹா! நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்" என்கிறார்கள்.
22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். எனவே சும்மா இராதேயும். என்னை விட்டு விலகாதேயும்.
23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.
24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும். அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
25 அந்த ஜனங்கள், "ஆஹா! எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்" எனக் கூறவிடாதேயும். கர்த்தாவே, "நாங்கள் அவனை அழித்தோம்!" என அவர்கள் கூறவிடாதேயும்.
26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன். எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். என்னைக்காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும்.
27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள். அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன். அந்த ஜனங்கள் எப்போதும், "கர்த்தர் மேன்மையானவர்! அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்" என்று கூறுகிறார்கள்.
28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×