Bible Versions
Bible Books

Revelation 9 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
2 அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது.
3 அப்புகையில் இருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் பறந்து வந்தன. அவற்றுக்குத் தேளுக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
4 பூமியில் உள்ள புல்லையோ செடி கொடிகளையோ, மரத்தையோ சேதமாக்கக்கூடாது என்று வெட்டுக்கிளிகளுக்கு ஆணை இருந்தது. தேவனுடைய முத்திரையைத் தம் நெற்றியில் தாங்காத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவ்வெட்டுக் கிளிகளுக்கு உத்தரவு இருந்தது.
5 மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது.
6 அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப் போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ளும்.
7 வெட்டுக்கிளிகள், போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப்போல இருந்தன. அவற்றின் தலைகளின் மேல் பொன்மயமான கிரீடங்கள் போன்றவை இருந்தன. அவை மனித முகங்களையும்,
8 பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன.
9 This verse may not be a part of this translation
10 அந்த வெட்டுக் கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது.
11 பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.
12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று. ஆனாலும் எச்சரிக்கையாயிருங்கள். இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வர இருக்கின்றன.
13 ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன்.
14 பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு என்று சொல்லக் கேட்டேன்.
15 எனவே, அந்த ஆண்டுக்கும், அந்த மாதத்துக்கும், நாளுக்கும், மணிக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் விடுவிக்கப்பட்டார்கள். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
16 அவர்களது படையில் குதிரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் கேள்விப்பட்டேன். அவை இருபது கோடி ஆகும்.
17 குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன.
18 குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள்.
19 அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன.
20 பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்).
21 இம்மக்கள் தம் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக் கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களைக் கொல்லும் வழக்கத்தையும் விடவில்லை. தம் தீயமந்திரங்கள், பாலியல் பாவங்கள், திருட்டு வேலைகள் போன்றவற்றையும் விடவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×