Bible Versions
Bible Books

Titus 2 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும்.
2 முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
3 மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆக வேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும்.
4 அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும்.
5 அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.
6 அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு.
7 இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும்.
8 பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.
9 அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது.
10 அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.
11 நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது.
12 தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது.
13 நமது மகா தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார்.
14 நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார்.
15 மக்களிடம் இவற்றைக் கூறு. உனக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தால் மக்களைப் பலப்படுத்து. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ முக்கியமற்றவன் என மற்றவர்கள் உன்னை நடத்தும் அளவுக்கு எவரையும் அனுமதிக்காதே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×