Bible Versions
Bible Books

1 Corinthians 1 (TOV) Tamil Old BSI Version

1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,
5 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
6 அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7 அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
8 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
11 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
13 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
14 என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,
15 நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
16 ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங்கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங்கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
19 அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.
26 எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.
27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×