Bible Versions
Bible Books

Colossians 2 (TOV) Tamil Old BSI Version

1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.
2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
4 ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
5 சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
6 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
10 மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
11 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
13 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
18 கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல்,
19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
20 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
21 மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
22 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×