Bible Versions
Bible Books

Exodus 26 (TOV) Tamil Old BSI Version

1 மேலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பரநூலினாலும் சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
3 ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
4 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
5 காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
6 ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
7 வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
8 ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
9 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.
10 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக.
12 கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
13 கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
14 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
15 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
18 வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
19 அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
20 வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
21 அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
22 வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
23 வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
24 அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.
25 அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
26 சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27 வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்.
30 இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
31 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
32 சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
34 மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;
35 திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
37 அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×