Bible Versions
Bible Books

Exodus 6 (TOV) Tamil Old BSI Version

1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
4 அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
5 எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
6 ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
7 உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
9 இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.
10 பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
11 நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
12 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
13 கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.
14 அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.
15 சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
16 உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
17 அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
18 கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
19 மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
21 இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
22 ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
23 ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
24 கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
25 ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
26 இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27 இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
28 கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
29 கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
30 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×