Bible Versions
Bible Books

Genesis 13 (TOV) Tamil Old BSI Version

1 ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
2 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.
3 அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
4 தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
5 ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
6 அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.
7 ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
8 ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
9 இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
10 அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
11 அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
13 சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகாபாவிகளுமாய் இருந்தார்கள்.
14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
15 நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
17 நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
18 அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×