Bible Versions
Bible Books

Joshua 8 (TOV) Tamil Old BSI Version

1 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும். அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
2 நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார்.
3 அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி,
4 அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள்.
5 நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
6 அப்பொழுது அவர்கள்; முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம்.
7 அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
8 நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
9 அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
10 அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான்.
11 அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12 அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.
13 பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம் பண்ணினபின்பு, யோசுவா அன்று இராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.
14 ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
15 யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
16 அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டு அப்புறப்பட்டார்கள்.
17 ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
18 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன்கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
19 அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
20 ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த் திரும்பினார்கள்.
21 பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
22 பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
23 ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
24 இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
25 அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.
26 ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
27 கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும் மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.
28 யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
29 ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
30 அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
31 அதின்மேல் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள்.
32 இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.
33 இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
34 அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.
35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×