Bible Versions
Bible Books

Revelation 6 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பின்பு ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைப்பதைக் கண்டேன். அப்போது நான்கு உயிருள்ள ஜீவன்களுள் ஒன்று இடிபோன்ற குரலில் பேசத் தொடங்குவதைக் கண்டேன். வா! என்று சொன்னது அக்குரல்.
2 நான் பார்த்தபோது எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருப்பதைப் பார்த்தேன். அக்குதிரையில் சவாரி செய்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் பகைவர்களை வீழ்த்துவதற்காகச் சென்றான். வெல்வதற்காகவே புறப்பட்டுப் போனான்.
3 ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் வா! என்று சொல்வதைக் கேட்டேன்.
4 பிறகு இன்னொரு குதிரை வெளியே வந்தது. அது தீ போன்ற சிவப்பு வண்ணம் கொண்டது. அதன்மேல் இருந்தவனுக்கு உலகத்தில் உள்ள சமாதானத்தை எடுத்துவிடவும், பூமியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குமான அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு ஒரு பெரிய வாளும் தரப்பட்டது.
5 ஆட்டுக் குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், வா! என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான்.
6 அப் பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச் சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற் கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே என்று கூறிற்று.
7 ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் வா! என்று அழைத்தது.
8 நான் பார்த்த போது மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. இக்குதிரையை ஓட்டி வந்தவனுக்கு மரணம் என்று பெயர். மேலும் அவனுக்குப் பின்னால் பாதாளம் நெருக்கமாய் வந்து கொண்டிருந்தது. உலகில் உள்ள கால் பங்கு மக்களின்மேல் அவ னுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. வாளாலும், பஞ்சத்தாலும் நோயாலும் காட்டு மிருகங்களாலும் மக்களைக் கொல்லும் அதிகாரத்தை அவன் பெற்றான்.
9 ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன்.
10 அந்த ஆன்மாக்கள் உரத்த குரலில் சத்தமிட்டன. பரிசுத்தமும் உண்மையும் உள்ள தேவனே! எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்? என்றன.
11 பிறகு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. பிறகு சிறிது நேரத்திற்குக் காத்திருக்கும்படி அவற்றிற்குச் சொல்லப்பட்டது. கொல்லப்படப்போகிற அவர்களைப் போன்ற கிறிஸ்துவின் சேவையிலுள்ள எல்லா சக ஊழியர்களும் உண்மையில் கொல்லப்படுவதுவரை அவை காத்திருக்க வேண்டும்.
12 ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைக் கவனித்தேன். அப்போது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. சூரியன் இருண்டது. துக்கம் கொண்டாடுகிறவன் அணிகிற ஆடைகள் போல அது கறுத்தது. நிலவு இரத்தம் போல சிவப்பானது.
13 வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்தி மரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன.
14 வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப் போல சுருண்டு கொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன.
15 மக்கள் குகைகளிலும், மலைப்புறங்களிலும் ஒளிந்து கொண்டனர். அவர்களுடன் அரசர்களும், ஆள்வோர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் இருந்தனர். அடிமைகளும் சுதந்தரமானவர்களும் அவர்களோடு ஒளிந்துகொண்டனர்.
16 மக்கள் மலைகளையும் பாறைகளையும் பார்த்து எங்கள் மேல் விழுங்கள். சிம்மாசனத்தில் இருப்பவரின் பார்வையில் இருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துவிடுங்கள்.
17 அவர்கள் தம் கோபத்தைக் காட்டுகிற தருணமாகிய மாபெரும் நாள் வந்துவிட்டது. அதனை எதிர்த்து ஒருவராலும் நிற்கமுடியாது. என்று கூறினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×