Bible Versions
Bible Books

1 Corinthians 16 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள்.
2 ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் உங்களில் ஒவ்வொருவனும் தங்கள் வரவுக்கேற்ப எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியுமோ அத்தனையையும் சேமித்து வையுங்கள். நீங்கள் இந்தப் பணத்தை ஒரு விசேஷமான இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள். அவ்வாறாயின் நான் வந்த பின் நீங்கள் பணத்தைத் திரட்டும் சிரமம் உங்களுக்கு இருக்காது.
3 நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன்.
4 நானும் அவர்களோடு போவது நல்லது எனத் தோன்றினால், அந்த மனிதரை என்னோடு அழைத்துச் செல்வேன்.
5 நான் மக்கதோனியாவின் வழியாகப் போகத் திட்டமிட்டுள்ளேன். நான் மக்கதோனியா வழியாகப் போனபின் உங்களிடம் வருவேன்.
6 நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும்.
7 நான் இந்தச் சமயத்தில் மட்டும் போகிற வழியில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. கர்த்தர் விரும்பினால் உங்களோடு நீண்ட காலம் தங்க விரும்புகிறேன்.
8 பெந்தெகோஸ்து வரைக்கும் எபேசுவில் தங்கி இருப்பேன்.
9 பெரிய வளர்ச்சியுறும் பணி எனக்கு இப்போது தரப்பட்டுள்ளதால் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தும்படிக்கு இங்கு தங்குவேன். அதற்கு எதிராக வேலை செய்வோர் பலர் உள்ளனர்.
10 தீமோத்தேயு உங்களிடம் வரக்கூடும். அவன் உங்களோடு பயமில்லாமல் இருக்க உதவுங்கள். என்னைப்போலவே அவனும் கர்த்தருக்காகப் பணியாற்றுகிறான்.
11 எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக் கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.
12 இப்போது நமது சகோதரன் அப்பொல்லோவைக் குறித்து எழுதுகிறேன். பிற சகோதரர்களுடன் சேர்ந்து அவன் உங்களைச் சந்திக்க வேண்டுமென மிகவும் ஊக்கமூட்டினேன். அவன் இப்போது உங்களிடம் வருவதில்லை என உறுதியாகக் கூறினான். அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அவன் உங்களிடம் வருவான்.
13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள்.
14 அன்பினால் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்.
15 அகாயாவில் ஸ்தேவானும் அவனது குடும்பத்தாரும், முதன் முதலில் விசுவாசம் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். அவர்கள் தங்களை தேவனுடைய மக்களுக்குச் செய்யும் சேவைக்காக ஒப்புவித்துள்ளார்கள். சகோதர சகோதரிகளே!
16 இத்தகையோரின் தலைமையை ஒத்துக் கொள்ளும்படியும் அவர்களோடு சேவை செய்கிற ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளும்படியும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வந்ததை அறிந்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை நிரப்பியுள்ளார்கள்.
18 எனது ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் அவர்கள் ஓய்வளித்துள்ளார்கள். இத்தகைய மனிதரின் மதிப்பை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.
19 ஆசியாவின் சபையினர் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறார்கள். அவர்களின்Ԕவீட்டில் சந்திக்கிற சபையும் உங்களை வாழ்த்துகிறது.
20 இங்குள்ள எல்லா சகோதர சகோதரிகளும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரி விக்கிறார்கள். நீங்கள் சந்திக்கையில் பரிசுத்த முத்தத்தின் மூலம் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள்.
21 பவுல் ஆகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினால் எழுதுகிறேன்.
22 கர்த்தரை நேசிக்காத எவனொருவனும் தேவனிடமிருந்து எந்நாளும் பிரிந்தவனாக முற்றிலும் அழிந்துபோனவனாக இருப்பானாக. கர்த்தரே, வாரும்.
23 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக!
24 கிறிஸ்து இயேசுவில் என் அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×