Bible Versions
Bible Books

1 Corinthians 8 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். நாம் அறிவுடையவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அறிவு உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும்.
2 தனக்கு ஏதோ தெரியுமென எண்ணுகிற ஒருவனுக்கு, இருக்க வேண்டிய அளவுக்கு ஞானம் இருப்பதில்லை.
3 ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன்.
4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம்.
5 பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. தேவனென்றும், கர்த்தரென்றும் மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு.
6 ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்.
7 ஆனால் எல்லோரும் இதனை அறியார். விக்கிரக வழிபாட்டுக்குப் பழகிப்போன சிலர் இருக்கிறார்கள். எனவே இறைச்சி உண்ணும்போது அது விக்கிரகத்துக்குரியது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. இந்த இறைச்சியைச் சாப்பிடுவது சரியா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதனைச் சாப்பிடும்போது அவர்கள் குற்றமனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்.
8 ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது.
9 ஆனால், உங்கள் சுதந்திரத்தைக் குறித்துக் கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிமையற்ற மக்களை உங்கள் சுதந்திரம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கும்.
10 உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான்.
11 உங்கள் அறிவினால் பலவீனமான இந்தச் சகோதரன் அழிக்கப்படுவான். ஆனால் இந்தச் சகோதரனுக்காகவும் இயேசு மரித்தார்.
12 கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள்.
13 நான் உண்ணும் உணவு எனது சகோதரனைப் பாவம் செய்யத் தூண்டினால் நான் மீண்டும் இறைச்சி சாப்பிடவேமாட்டேன். எனது சகோதரன் மீண்டும் பாவம் செய்யாதபடி இறைச்சி உண்ணுவதை விட்டுவிடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×