Bible Versions
Bible Books

Deuteronomy 13 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான்.
2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான்.
3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார்.
4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்!
5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான். உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழும்படி கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து உங்களை வெளியே இழுக்க அந்த ஆள் முயற்சித்தான். எனவே நீங்கள் அவனைக் கொன்று அந்தத் தீமையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள்.
6 "யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது.
7 அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.)
8 நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது.
9 (9-10) அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை வெளியே இழுக்க முயற்சி செய்தவன் அவன்
10 10.
11 பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், அதைக் கேட்டுப் பயந்து உங்களின் நடுவே இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
12 "உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழ்வதற்கான நகரங்களைத் தந்துள்ளார். சில நேரங்களில் நீங்கள் அந்த நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தைப் பற்றித் தீய செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் கேட்கும் அந்தச் செய்தியானது,
13 உங்கள் தேசத்தைச் சார்ந்த சில தீயவர்கள் அவர்களது நகர ஜனங்களை தீயச் செயல்களைச் செய்யுமாறு தூண்டினார்கள்’ என்பதாகும். அவர்கள் அவர்களது நகர ஜனங்களிடம் ‘அந்நிய தெய்வங்களை தொழுது கொண்டு சேவை செய்வோம் வாருங்கள்!’ என்று அழைத்த செயலே அதுவாகும். (அந்தத் தெய்வங்கள் நீங்கள் இதற்கு முன் அறிந்திராத அந்நிய தெய்வங்கள்.)
14 இப்படிப்பட்டச் செய்திகளை நீங்கள் கேட்டீர்கள் எனறால், அனைவரும் அதை நன்றாகக் கேட்டு ஆராய வேண்டும். நீங்கள் விசாரித்தது உண்மை என்றால், அப்படிப்பட்ட எரிச் சலூட்டும் காரியம் உங்கள் நடுவே நடந்தது உண்மையென்று கண்டீர்கள் என்றால்,
15 பின் அந்த நகர ஜனங்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். நீங்கள் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். அவர்களது விலங்குகளையும் கூட கொன்றுவிடவேண்டும். அந்த நகரத்தை முழுவதுமாக நாசமாக்கி அழித்து விட வேண்டும்.
16 பின் நீங்கள் அங்கு கைப்பற்றிய அனைத்துப் பொருட்களையும், விலையுயர்ந்தப் பெருட்களையும், நகரத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்து நகரத்தையும் அதிலுள்ள எல்லா வற்றையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யும் தகனபலியாகும், அந்த நகரமானது வெறும் வெற்றிடமாக மண்மேடாகவே என்றென்றும் இருக்கும். அந்த நகரம் மீண்டும் கட்டப்படவே கூடாது.
17 அந்த நகரில் உள்ள எல்லாப் பொருளும் அழிக்கப்படுவதற்காக தேவனிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆகையால் நீங்கள் அவற்றில் எந்த ஒரு பொருளையும் உங்களுக்காக வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படி நீங்கள் செய்வீர்கள் என்றால் கர்த்தர் உங்கள் மீதுள்ள கடுங்கோபத்தை நிறுத்திவிடுவார். கர்த்தர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார். உங்களுக்காக வருந்துவார். அவர் உங்கள் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி வளார்ச்சி அடையச் செய்வார்.
18 இவைகள் நடக்க வேண்டுமென்றால் நான் இன்று உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறியதைக் கேட்டு அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லும் சரியானவற்றையெல்லாம் நீங்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×