Bible Versions
Bible Books

Exodus 39 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு வரும்போது ஆசாரியர் அணிய வேண்டிய விசேஷ ஆடைகளை நெய்வதற்கு இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலை சித்திர வேலையாட்கள் பயன்படுத்தினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆரோனுக்கு விசேஷ ஆடைகளைத் தயாரித்தனர்.
2 பொன் ஜரிகை, மெல்லிய துகில், இள நீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் ஏபோத்தைச் செய்தார்கள்.
3 (அவர்கள் பொன்னை மெல்லிய நாடாவாக அடித்து பொன் ஜரிகைகளை வெட்டினார்கள். இந்தப் பொன் ஜரிகையை இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலிலும், மெல்லிய துகிலுடனும் சேர்த்து நெய்தார்கள். இது சிறந்த சித்திரக்காரனின் கைவேலையாக இருந்தது).
4 அவர்கள் ஏபோத்தின் தோள் பட்டைகளைச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் அந்தத் தோள் பட்டைகளை இணைத்தார்கள்.
5 அவர்கள் கச்சையை ஏபோத்தோடு இணைத்தார்கள். ஏபோத்தைப் போலவே இதுவும் செய்யப்பட்டது. அவர்கள் பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
6 கைவேலைக்காரர் ஏபோத்துக்கு இரண்டு கோமேதகக் கற்களை தங்கச்சட்டத்தில் பதித்தனர். அக்கற்களின்மீது இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைப் பதித்தனர்.
7 பின் அவர்கள் அதனை ஏபோத்தின் தோள்பட்டைகளோடு இணைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நினைவு கூருவதற்காக இந்தக் கற்கள் பயன்பட்டன. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தனர்.
8 பின் அவர்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை செய்தனர். ஏபோத்தைச் செய்தது போலவே, இதுவும் கைத்தேர்ந்த சித்திர வேலையாக இருந்தது. அது பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலால் நெய்யப்பட்டன.
9 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து சதுரவடிவில் அமைத்தனர். இது 9 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையதாக இருந்தது.
10 சித்திரவேலையாட்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் 4 வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதித்தனர். முதல் வரிசையில் பத்மராகமும், புஷ்பராகமும், மாணிக்கமும் இருந்தன.
11 இரண்டாம் வரிசையில் மரகதமும், இந்திர நீலக் கல்லும், வச்சிரமும் காணப்பட்டன.
12 மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், சுகந்தியும் இருந்தன.
13 நாலாம் வரிசையில் படிகப் பச்சையும், கோமேதகமும், யஸ்பியும் காணப்பட்டன. இந்தக் கற்கள் அனைத்தும் பொன்னில் பூட்டப்பட்டிருந்தது.
14 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் இஸ்ரவேலின் (யாக்கோபின்) ஒவ்வொரு மகனுக்கும் ஒவ்வொரு கல் வீதம் பன்னிரண்டு கற்கள் இருந்தன. ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப் போன்று இஸ்ரவேலின் மகன்கள் ஒவ்வொருவரின் பெயரும் பொறிக்கபட்டிருந்தது.
15 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக சித்திர வேலைக்காரர் பசும்பொன்னால் இரண்டு சங்கிலிகளைச் செய்தார்கள். அச்சங்கிலிகள் கயிறுகளைப் போல் பின்னப்பட்டிருந்தன.
16 சித்திர வேலைக்காரர் இரண்டு பொன் வளையங்களைச் செய்து, அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் இணைத்தனர். தோள்பட்டைகளுக்கு பூட்டும்படி இரண்டு பொன் வளையங்களைச் செய்தனர்.
17 அவர்கள் பொன் சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளிலிருந்த வளையங்களில் இணைத்தனர்.
18 தோள்பட்டைகளின் பொன்வளையங்களில் பொன் சங்கிலிகளின் மறுமுனைகளை இணைத்தனர். இவற்றை அவர்கள் ஏபோத்தின் முன்புறத்தில் சேர்த்தனர்.
19 பின்பு அவர்கள் மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு மூலைகளிலும் தைத்தனர். ஏபோத்தை அடுத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புறத்தில் இது இருந்தது.
20 ஏபோத்தின் முன்புறத்தில் தோள்பட்டைகளின் கீழே இரண்டு பொன் வளையங்களை தைத்தனர். கச்சைக்கு மேலே ஏபோத்தின் இணைப்புக்கருகே இவ்வளையங்கள் இருந்தன.
21 பின் அவர்கள் நீல நிற நாடாவையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களையும் ஏபோத்தின் வளையங்களோடு கட்டினார்கள். இவ்விதமாக நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகில் ஏபோத்துக்கு இணையாக இருக்கும்படி இழுத்துக் கட்டப்பட்டது. கர்த்தர் கட்டளையிட்டபடி அவர்கள் எல்லாவற்றையும் செய்தனர்.
22 பின் அவர்கள் ஏபோத்திற்காக ஒரு அங்கியை நெய்தனர். இளநீல துணியால் அதைச் செய்தார்கள். அது சிறந்த சித்திரத் தையல்காரனால் நெய்யப்பட்டது.
23 அங்கியின் மத்தியில் ஒரு துளையை அவர்கள் உண்டு பண்ணி, அந்தத் துவாரத்தின் விளிம்பைச் சுற்றிலும் ஒரு துண்டுத் துணியைத் தைத்தனர். துவாரம் கிழிந்து போகாதபடி அது பாதுகாத்தது.
24 பின் அவர்கள் மெல்லிய துகில், இளநீலம், இரத் தாம்பரம், சிவப்பு நிற நூலைக் கொண்டு துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்கினார்கள். அங்கியின் கீழ்த்தொங்கலில் இந்த மாதுளம் பழங்களைத் தைத்தனர்.
25 பின்பு பசும் பொன்னால் மணிகளை உண்டாக்கினார்கள். அவற்றை அங்கியின் கீழ்த்தொங்கலில் மாதுளம் பழங்களுக்கு இடையே தொங்கவிட்டனர்.
26 அங்கியின் கீழ்த் தொங்கலைச் சுற்றிலும் மாதுளம் பழங்களும், பொன்மணிகளும் இருந்தன. மாதுளம் பழங்களுக்கு இடையில் ஒரு பொன்மணி இருந்தது. மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, கர்த்தருக்கு பணிவிடை செய்யும்போது ஆசாரியன் அணியும் அங்கியாக இது இருந்தது.
27 ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் சட்டைகளை கைவேலைக்காரர் நெய்தனர். இவை மெல்லிய துகிலால் நெய்யப்பட்டன.
28 மெல்லிய துகிலிலிருந்து கை வேலையாட்கள் ஒவ்வொரு தலைப்பாகையையும் நெய்தனர். உள் ஆடைகளையும் நெற்றிப்பட்டைகளையும் மெல்லிய துகிலிலிருந்து செய்தார்கள்.
29 மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலிலிருந்து கச்சையைச் செய்தனர். ஆடையில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தும் தைக்கப்பட்டன.
30 பின் பரிசுத்தக் கிரீடத்திற்குரிய நெற்றிப்பட்டையைத் தயாரித்தனர். சுத்தப் பொன்னால் அதைச் செய்தனர். அந்தப் பொன் தகட்டில் "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்ற வார்த்தைகளைப் பதித்தனர்.
31 பொன் பட்டையை நீல நாடாவில் இணைத்தனர். மோசேக்குக் கர்த்தர் இட்ட கட்டளைப்படியே இந்த நீல நாடாவை தலைப்பாகையோடு இணைத்தனர்.
32 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் (அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின்) எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொன்றையும் செய்தனர்.
33 பின் அவர்கள் மோசேக்குப் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் காட்டினார்கள். வளையங்கள், சட்டங்கள், தாழ்ப்பாள்கள், தூண்கள், பீடங்கள் ஆகியவற்றை அவனுக்குக் காட்டினார்கள்.
34 சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக்கடாவின் தோலால் கூடாரம் மூடப்பட்டிருந்ததைக் காட்டினார்கள். அதன் கீழ் பதனிடப்பட்ட மெல்லிய தோலாலாகிய மூடியையும் காட்டினார்கள். மகா பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடிய திரைச் சீலையயும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
35 அவர்கள் மோசேக்கு உடன்படிக்கைப் பெட்டியைக் காட்டினார்கள். பெட்டியைச் சுமக்கும் தண்டுகளையும், பெட்டியின் மூடியையும் காண்பித்தனர்.
36 மேசையை அதனுடன் சேர்ந்த பொருட்களோடும், விசேஷ ரொட்டியோடும் காட்டினார்கள்.
37 அவர்கள் அவனுக்குப் பசும் பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்குத் தண்டையும் அதன் அகல்களையும் காட்டினார்கள். அகலுக்குப் பயன்படுத்தவேண்டிய எண்ணெயையும் பிற பொருட்களையும் காண்பித்தனர்.
38 பொன் நறுமணப்பீடம், அபிஷேக எண்ணெய், நறுமணப்பொருள், கூடாரத்தை மூடிய தொங்குதிரை ஆகியவற்றையும் அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள்.
39 வெண்கல பலிபீடத்தையும், வெண்கல சல்லடையையும் அவனுக்குக் காட்டினார்கள். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளையும் காட்டினார்கள். பலிபீடத்தின் பொருட்களையும் காண்பித்தனர். வெண்கலத் தொட்டியையும் அதன் பீடத்தையும் அவனுக்குக் காட்டினார்கள்.
40 பின்பு தூண்களோடும் அவற்றின் பீடங்களோடும் கூடிய வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் காணப்பட்ட தொங்கு திரைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். பிரகாரத்தின் நுழை வாயிலில் இருந்த திரையைக் காண்பித்தனர். கயிறுகளையும், கூடார ஆணிகளையும் காட்டினார்கள். பரிசுத்த கூடாரத்தின் அதாவது ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லாப் பொருட்களையும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
41 பரிசுத்த பிரகாரங்களில் பணிவிடை செய்யும் ஆசாரியர்களுக்கான ஆடைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். ஆசாரியனான ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தைக்கப்பட்ட விசேஷ ஆடைகளைக் காட்டினார்கள். அவர்கள் ஆசாரியர்களாகப் பணிவிடை செய்யும் போது அணிய வேண்டிய ஆடைகள் இவையாகும்.
42 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்திருந்தனர்.
43 மோசே எல்லா வேலைகளையும் கூர்ந்து கவனித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே எல்லா வேலைகளும் நிறைவேற்றப்பட்டதைக் கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×