Bible Versions
Bible Books

Ezekiel 46 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். ‘உட்பிரகாரத்தின் கிழக்கு வாசல் ஆறு வேலை நாட்களிலும் பூட்டப்பட்டிருக்கும், அது ஓய்வு நாளிலும், அமாவாசை நாளிலும் திறக்கப்படும்.
2 அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து வாசலருகில் நிற்பான். பிறகு ஆசாரியர்கள் அதிபதியுடைய தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைப்பார்கள். அதிபதி வாசல் படியிலேயே தொழுகை செய்வான். பிறகு அவன் வெளியேறுவான். அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருக்கும்.
3 பொது ஜனங்கள் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் தொழுகை நடத்துவார்கள்.
4 ‘அதிபதி ஓய்வு நாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலியைத் தருவான். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக் கடாவுமே தருவான்.
5 ஆட்டுக் கடாவோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவைக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளோடே தானியக் காணிக்கையாக தன்னால் முடிந்தவரை கொடுக்க வேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.
6 ‘அமாவாசை நாளிலோ, பழுதற்ற இளங் காளையை அவன் கொடுக்கவேண்டும். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலிகொடுக்கவேண்டும்.
7 தானியக் காணிக்கையாக இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவைக் கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக் குட்டிகளோடு தானியக்காணிக்கையை தனக்கு முடிந்தவரை கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.
8 அதிபதி வருகிறபோது, கிழக்கு வாசலின் மண்டபத்தின் வழியாய் நுழைந்து அதன் வழியாகத் திரும்பிப்போக வேண்டும்.
9 பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும்.
10 அவர்கள் நுழையும்போது அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடு கூட நுழைய வேண்டும். அவர்கள் புறப்படும்போது அவனும் அவர்களோடு கூடப் புறப்பட்டு போகவேண்டும்.
11 ‘பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.
12 ‘அதிபதி சுயவிருப்பக் காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தும்போது அது தகன பலியாயிருக்கலாம், அல்லது சமாதான பலியாயிருக்கலாம். அல்லது சுயவிருப்பக் காணிக்கையாயிருக்கலாம். அவனுக்குக் கிழக்கு வாசல் திறக்கப்படவேண்டும். அப்பொழுது அவன் ஓய்வு நாட்களில் செய்கிறது போல தன் தகனபலியையும் சமாதான பலியையும் செலுத்தி பின்பு புறப்படவேண்டும். அவன் புறப்பட்ட பின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
13 ‘நீ ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆட்டுக் குட்டியைக் கொடுப்பாய். இது ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குத் தகன பலியாக இருக்கும். நீ இதனை ஒவ்வொரு நாள் காலையிலும் கொடுப்பாய்.
14 அதோடு ஒவ்வொரு நாள் காலையிலும் நீ ஆட்டுக் குட்டியோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவிலே 1/6 பங்கு (14 கோப்பை) ஒரு படி எண்ணெயிலே 1/3 பங்கு (1/3 கேலன்) எண்ணெயை மாவைப் பிசைவதற்காகவும் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்குத் தினந்தோறும் கொடுக்க வேண்டிய தானியக் காணிக்கையாகும்.
15 எனவே அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தகன பலியாக ஆட்டுக்குட்டியையும் எண்ணெயையும் தானியக் காணிக்கையையும் செலுத்த வேண்டும்."
16 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘ஒரு அதிபதி தனது நிலத்திலுள்ள ஒரு பங்கைத் தன் மகன்களில் ஒருவனுக்குக் கொடுத்தால் அது அம்மகனுக்குரியதாகும். அது அவனுடைய சொத்தாகும்.
17 ஆனால் அவன் தன் அடிமைகளில் ஒருவனுக்குத் தன் நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது விடுதலையடையும் ஆண்டுவரை (யூபிலிவரை) அவனுடையதாக இருக்கும். பிறகு, அது திரும்பவும் அதிபதியின் உடமையாகும். அதிபதி மகன்களுக்கு மட்டுமே அது உரியதாகும். அது அவர்களுடையதாக இருக்கும்.
18 அதிபதி தன் ஜனங்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அல்லது அவன் அவர்களைப் பலவந்தமாக நிலத்தைவிட்டு வெளியேற்ற முடியாது. அவன் தன் சொந்த நிலத்தையே தன் மகன்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு எனது ஜனங்கள் தம் நிலத்தை இழக்கும்படி பலவந்தப்படுத்தப்படமாட்டார்கள்."
19 அம்மனிதன் வாசலின் பக்கத்தில் இருந்த நடை வழியாய் என்னை அழைத்துப் போனான். அவன் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்தமான அறைகளுக்கு அழைத்துப்போனான். அங்கே பாதைக்கு மேற்புறக் கடைசியில் ஒரு இடம் இருப்பதைப் பார்த்தேன்.
20 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: ‘இந்த இடம் தான் ஆசாரியர்கள் குற்றநிவாரணப் பலியையும் பாவப்பரிகார பலியையும், தானியக் காணிக்கையை யும் சமைக்கிற இடம். ஏனென்றால், வெளிப்பிரகாரத்திலே கொண்டுபோய் இந்த காணிக்கைகளை ஜனங்களிடம் காட்ட வேண்டிய தேவையில்லை. எனவே, அவர்கள் பரிசுத்தமான இப்பொருட்களைப் பொது ஜனங்கள் இருக்கிற இடத்திற்குக் கொண்டுவரமாட்டார்கள்."
21 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். என்னைப் பிரகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்து போகச் செய்தான். பெரிய முற்றத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய முற்றங்கள் இருப்பதைக் கண்டேன்.
22 பிரகாரத்தின் நாலு மூலைகளிலும் வேலியடைக்கப்பட்ட சிறுபகுதி இருந்தது. ஒவ்வொரு முற்றமும் 40 முழம் (70’) நீளமும் 30 முழம் (52’6") அகலமும் உடையது. நான்கு மூலைகளும் ஒரே அளவுடையதாக இருந்தன.
23 உள்ளே இந்த நாலு சிறு முற்றங்களைச் சுற்றிலும் செங்கல் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்களுக்குள் சமைப்பதற்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன.
24 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: ‘இவை, ஜனங்கள் தரும் பலிகளை ஆலயத்தின் வேலைக்காரர்கள் சமைக்கிற சமையலறைகள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×