Bible Versions
Bible Books

Ezekiel 7 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது.
2 அவர் சொன்னார்: ‘இப்பொழுது, மனுபுத்திரனே, இதைச் சொல்: எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இச்செய்தி இஸ்ரவேல் நாட்டுக்குரியது! முடிவு வந்திருக்கிறது. நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
3 இப்பொழுது உன் முடிவு வந்துகொண்டிருக்கிறது! நான் உன் மீது எவ்வளவு கோபத்தோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கரமானவற்றுக்கெல்லாம் உன்னை விலை கொடுக்கும்படிச் செய்வேன்.
4 நான் உன்னிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிக்கிறேன். நீ அத்தகைய பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறாய். இப்பொழுது நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்."
5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: ‘ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்!
6 முடிவு வருகிறது, அது விரைவில் நிகழும்!
7 இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
8 இப்பொழுது மிக விரைவில் நான் எனது கோபத்தைக் காட்டுவேன். உனக்கு எதிரான எனது கோபம் முழுவதையும் நான் காட்டுவேன். நீ செய்த தீயவற்றுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கர செயலுக்காக விலை கொடுக்கச் செய்வேன்.
9 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீங்கள் அத்தகைய பயங்கரங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை அடிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
10 ‘ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பது போல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட அரசனான நேபுகாத்நேச்சார் ஏற்கனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான்.
11 மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.
12 ‘அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.
13 தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.
14 ‘அவர்கள் ஜனங்களை எச்சரிக்க எக்காளத்தை ஊதுவார்கள். ஜனங்கள் போருக்குத் தயாராவார்கள். ஆனால் அவர்கள் போர் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கூட்டத்தின் மேல் நான் எவ்வளவு கோபங்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்.
15 பகைவன் தனது வாளோடு நகரத்திற்கு வெளியே இருக்கிறான். நோயும் பசியும் நகரத்திற்குள்ளே இருக்கின்றன. ஒருவன் நகரத்திற்கு வெளியே போனால் பகைவரின் போர்வீரன் கொல்வான். அவன் நகரில் தங்கினால் பசியும் நோயும் அவனை அழிக்கும்.
16 ‘ஆனால் சில ஜனங்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் மலைகளுக்கு ஓடுவார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் தமது அனைத்து பாவங்களுக்காகவும் வருந்துவார்கள். அவர்கள் அழுவார்கள். புறாக்களைப் போன்ற துயர ஒலிகளை எழுப்புவார்கள்.
17 ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும்.
18 அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள்.
19 அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.
20 ‘அந்த ஜனங்கள் தம் அழகான நகைகளைப் பயன்படுத்தி ஒரு சிலையைச் செய்தனர். அவர்கள் அச்சிலைக்காகப் பெருமைப்பட்டனர். அவர்கள் தமது வெறுக்கத் தக்க சிலைகளைச் செய்தனர்! அவர்கள் நரகலான அவற்றைச் செய்தனர். எனவே நான் (தேவன்) அவர்களை அழுக்கு நிறைந்த கந்தையைப்போல் வெளியே எறிவேன்.
21 அவர்களை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்படி அனுமதிப்பேன். அந்நியர்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். அந்த அந்நியர்கள் சில ஜனங்களைக் கொன்று மற்றவர்களைக் கைதிகளாகச் சிறைபிடிப்பார்கள்.
22 அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.
23 ‘சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும்.
24 நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்.
25 ‘ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது.
26 நீங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் துன்பக் கதைகளைக் கேட்பீர்கள். நீங்கள் கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் தீர்க்கதரிசியைத் தேடி அவனிடம் தரிசனம் பற்றி கேட்பீர்கள், ஆனால் அது கிடைக்காது. ஆசாரியர்களிடம் உங்களுக்குக் கற்றுத்தர எதுவும் இருக்காது. மூப்பர்களிடம் உங்களுக்கு ஆலோசனை சொல்ல எதுவும் இருக்காது.
27 உங்கள் அரசன் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுதுகொண்டிருப்பான். தலைவர் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் மிகவும் பயந்து போயிருப்பார்கள். ஏனென்றால், நான் அவர்களுடைய தீயசெயல்களுக்கு ஏற்றவண்ணம் திருப்பிக்கொடுப்பேன். அவர்களுக்குரிய தண்டனையை நான் தீர்மானிப்பேன். நான் அவர்களைத் தண்டிப்பேன். பிறகு அந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×