Bible Versions
Bible Books

Genesis 16 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார்.
2 சாராய் ஆபிராமிடம், "கர்த்தர் நான் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்" என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான்.
3 இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்)
4 ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள்.
5 ஆனால் சாராய் ஆபிராமிடம், "இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக் கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்" என்றாள்.
6 ஆனால் ஆபிராமோ சாராயிடம், "நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்" என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.
7 பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரைக் கர்த்தருடைய தூதன் கண்டான்.
8 தூதன் அவளிடம், "சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டான். அவளோ, "நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்றாள்.
9 அதற்குக் கர்த்தருடைய தூதன், "சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு.
10 உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்" என்றான்.
11 மேலும் கர்த்தருடைய தூதன், "ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு. ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் மகன் உனக்கு உதவுவான்.
12 "இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும், சுதந்திரமானவனாகவும் இருப்பான். அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான். ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள். அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான். அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்" என்றான்.
13 கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று கூறினாள். அவள், "இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்" என்று நினைத்து இவ்வாறு சொன்னாள்.
14 எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.
15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான்.
16 ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×