Bible Versions
Bible Books

Hebrews 4 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தேவன் அந்த மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இன்றும் நம்மிடம் உள்ளது. தேவனுடைய இளைப்பாறுதலில் நாம் பிரவேசிக்க முடியும் என்பதே அந்த வாக்குறுதி. ஆகையால் உங்களில் யாரும் இவ்வாக்குறுதியைப் பெறுவதில் தவறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.
2 இரட்சிக்கப்படும் வழி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன்படாமல் போயிற்று. ஏன்? ஏனென்றால் அவர்கள் அதனை விசுவாசமில்லாமல் கேட்டனர்.
3 விசுவாசித்த நம்மால் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியும். தேவன் சொன்னதுபோல, எனவே நான் கோபத்தோடு, ԅஅவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது என்று ஆணையிட்டேன் சங்கீதம் 95:11 தேவன் இதைச் சொன்னார். ஆனால் இவ்வுலகத்தை உருவாக்கின நேரமுதல் தம் வேலையை தேவன் முடித்தார்.
4 வாரத்தின் ஏழாவது நாளைப் பற்றி தேவன் பேசினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, ஏழாவது நாளில் தேவன் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு எடுத்தார்.
5 மேலும் அதே பகுதியில், மீண்டும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது என்றும் தேவன் கூறியிருக்கிறார்.
6 சிலர் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையப் போகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முதலில் நற்செய்தியைக் கேட்டவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையவில்லை. அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தான் காரணம்.
7 எனவே தேவன் இன்னொரு நாளைத் திட்டமிட்டார். அது இன்று என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாளைக் குறித்து தாவீதின் மூலமாக ஏற்கெனவே மேற்கோள் காட்டிய பகுதியில் தேவன் பேசுகிறார், இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.சங்கீதம் 95:7-8
8 தேவனுடைய வாக்குறுதிப்படி அவரது இளைப்பாறுதலுக்குள் யோசுவா மக்களை வழி நடத்தவில்லை என்பது தெரியும். ஏனென்றால் பின்னர் இளைப்பாறுதலுக்கு தேவன் ԅஇன்று என இன்னொரு நாளைப் பற்றிக் கூறியிருக்கிறாரே.
9 தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
10 தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும்.
11 எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம்.
12 தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது.
13 தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும். இயேசு உதவுகிறார்
14 நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக.
15 பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்து கொள்ள முடியும். பூமியில் வாழ்ந்த போது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை.
16 எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள சிம்மாசனத்தை நாம் அணுகலாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×